பங்குனி மாதம்... என்னென்ன விசேஷங்கள்..என்னென்ன சிறப்புகள்?
The month of PanguniWhats the matter What are the specialties
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. பங்குனி மாதத்தை வசந்த காலம் என்று அழைப்பர்.
பங்குனி மாதத்தில்தான் ராம நவமி, கடவுள்களின் திருமணங்கள் நடைபெற்ற பங்குனி உத்திரம் என்று பல்வேறு நிகழ்வுகள் நிகழ்கின்றன.
இம்மாதத்தில் தெய்வங்களின் திருமணம் நடைபெறுவதால் இது திருமண மாதம் என்ற சிறப்பினைப் பெறுகிறது.
* 18.3.2025 (பங்குனி 04) காரைக்கால் அம்மையார் குருபூஜை :
அம்மையே என்று ஈசனின் திருவாயால் அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார்.
தனது பக்தியின் மூலமும், பாடல்கள் மூலமும் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி, கையாலேயே நடந்து கயிலை சென்று இறைவனைத் தரிசித்த காரைக்கால் அம்மையாரின் குருபூஜை, பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது.
* 25.03.2025 (பங்குனி 11) விஜயா ஏகாதசி :
ஏகாதசி பெருமாளுக்குரிய நாள். பங்குனி மாதத்தில் தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். விஜயா ஏகாதசி தினத்தில் ஏழு தானியங்களை ஒன்றன் மேல் மற்றொன்றைப் பரப்பி மகாவிஷ்ணுவை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
* 29.03.2025 (பங்குனி 15) சர்வ அமாவாசை :
இறந்த முன்னோர்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் அமாவாசை. அன்று புனித நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பாவங்கள் அனைத்தும் விலகி சகல நன்மைகளும் வந்து சேரும்.
* 30.03.2025 (பங்குனி 16) வசந்த நவராத்திரி :
நான்கு நவராத்திரிகளுள் ஒன்றான வசந்த நவராத்திரி தொடங்குகிறது. இந்த வசந்த நவராத்திரி காலத்தில் அம்மனை வழிபட்டால் அம்மனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
* 06.04.2025 (பங்குனி 23) ஸ்ரீராம நவமி :
ராமபிரான் அவதரித்த புண்ணிய தினமே ஸ்ரீராம நவமி. பூவுலகில் தீமையை அழிக்கவும், சரணாகதித் தத்துவத்தின் மகிமையை விளக்கவும் மகாவிஷ்ணு மண்ணுலகில் ராமனாக வந்து அவதரித்தார்.
ராம நவமி அன்று விரதமிருந்து பானகம், நீர்மோர் ஆகியன படைத்து ராமபிரானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.
* 08.04.2025 (பங்குனி 25) ஆமலகீ ஏகாதசி :
ஏகாதசி, பெருமாளை வணங்குவதற்கு உகந்த நாளாகும். பங்குனி வளர்பிறை ஏகாதசிக்கு ஆமலகீ ஏகாதசி என்று பெயர். இன்றைய தினத்தில் விரதமிருந்து, நெல்லி மரத்தடியில் பரசுராமர் படத்தை வைத்து பூஜை செய்தால்
புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
பசு தானம் செய்த புண்ணியமும் கிடைக்கும்.
* 10.04.2025 (பங்குனி 27) பிரதோஷம் :
சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த நாள் பிரதோஷ தினமாகும்.
பிரதோஷ தினத்தில் கோவிலுக்கு சென்று சிவ வழிபாடு செய்தால் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.
* 11.04.2025(பங்குனி 28) பங்குனி உத்திரம் :
12வது மாதமான பங்குனி பௌர்ணமியுடன் 12வது நட்சத்திரமான உத்திரம் இணையும் புண்ணிய நாளே பங்குனி உத்திரம்.
பங்குனி உத்திரத்தில்தான் சிவன் - பார்வதி, முருகன் - தெய்வானை, ராமன் - சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன என்று புராணங்கள் கூறுகின்றன.
* 12.04.2025 (பங்குனி 29) பௌர்ணமி :
பௌர்ணமியன்று செய்யப்படும் அம்பிகை வழிபாட்டுக்கு பலன்கள் அதிகம். பௌர்ணமி இரவு நேரத்தில் சிவ வழிபாடு செய்த பிறகு கிரிவலம் மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும். உடலும், மனமும் ஆரோக்கியமாகும்.
English Summary
The month of PanguniWhats the matter What are the specialties