ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு; திருப்பதி தேவஸ்தானம்..!
Tirupati Devasthanams releases online Arjitha Seva tickets for the month of July
திருப்பதியில் ஜூலை மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், இதர தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை ஜூலை மாதம் வழிபட இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் சேவை டிக்கெட்டுகளின் லக்கி டிப் பதிவுக்கு இன்று காலை 10 மணியில் இருந்து 21-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

லக்கி டிப் மூலம் இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்களுக்கு 21 முதல் 23-ந்தேதி மதியம் 12 மணி வரை பணம் செலுத்தினால் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீபலங்கார சேைவ டிக்கெட்டுகள் 22-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். உற்சவ சேவைகளுக்கான ஜூலை மாத ஒதுக்கீடு தரிசன ஸ்லாட்டுகள் 22-ந்தேதி மாலை 03 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 23-ந்தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண டோக்கன்கள், காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும். அத்துடன், வயதான மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன ஒதுக்கீடு 23-ந்தேதி மாலை 03 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

சிறப்பு நுழைவு தரிசன டிக்கட்டுகள் (ரூ.300 கட்டணம்) 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். திருப்பதி, திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதி அறைகள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 03 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளமான Https://ttdevasthanams.ap.gov.in தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் குறிப்பிட்ட நாளுக்கு திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Tirupati Devasthanams releases online Arjitha Seva tickets for the month of July