நாளை வியாழன்.. கசப்பான வருத்தம் நீங்கி மன நிம்மதி பெற சாயிபாபாவின் மந்திரங்கள்.! - Seithipunal
Seithipunal


ஓம் ஜெயி சாயி ராம் !!

என் அன்புக் குழந்தாய்!

சமீப காலமாக உனக்கு ஏற்பட்டு வருகிற சில கசப்பான அனுபவங்களை நினைத்து வருத்தப்பட்டு வருகிறாய்.. உனக்கு மேலிருப்பவர்கள் உன்னை நிந்திப்பதும், உன்னைக் கேவலப்படுத்துவதும், உன் வாயைப் பிடுங்கிக்கொண்டு அதைக் குற்றமாகப்பேசுவதும் தொடர்கதைகளாகிக் கொண்டு வருகின்றன. இதனால் நீ கலங்குகிறாய் அல்லவா?

வீட்டில் உன்னை கண்டபடி கடிந்துகொண்டு வாசலில் தள்ளி வைப்பதையும், வழியின்றி நீ திகைத்து நிற்பதையும் கண்டு பரிதவிக்கிறேன்.

இதோ நான் கற்றுத் தரும் சில விஷயங்கள் உனக்கு ஆறுதலாகவும் தெளிவாகவும் இருக்கும். நீ நடக்க வேண்டிய வழிகளை போதிக்கும்.என் வழியைப் பின்பற்று.. உன் கப்பல் எந்த சேதாரமும் இல்லாமல் கரை சேரும்.

முதலில் உன் வாய்க்குக் கடிவாளம் போடு உனது வார்த்தைகள் உன்னைப் பற்றி பிறருக்கு அடையாளம் காட்டக்கூடியவை.

வார்த்தைகளால் இந்த உலகம் தலைகீழாக மாறியிருக்கிறது. போரும், சமாதானமும், சண்டையும், சந்தோஷமும், இன்பமும் துன்பமும் இந்த வார்த்தைகளால்தான் வருகின்றன.

எனவே, நீ வார்த்தைகளைச் சொல்வதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும் என்பதே எனது முதல் ஆலோசனை. இதற்காக நான் மூன்று மந்திரங்களை உனக்கு உபதேசிக்கிறேன்.

அவை நில், கவனி, சொல்! என்பவை. நில் என்பதற்கு நிதானித்தல் என்று பொருள். கவனி என்பதற்கு பிறரை பேசவிட்டு கவனிப்பது மட்டுமின்றி, அவரது உடலின் பேச்சுக்களையும் கூர்ந்து கவனிப்பது என்பது பொருள்.

சொல் என்பது அதற்குப் பிறகு நீ பேச வந்ததை உடனே சொல்லாமல் அவர்கள் விரும்பம் விதத்தில் பேசு என்பது பொருள். இவற்றை சரியாகக் கடைப்பிடித்தால் உனக்கு சிக்கல்கள் வராது.

நில் உன்னைச் சுற்றியிருப்பவர்கள் உள்ளத்தில் ஒன்று உதட்டில் வேறொன்று வைத்துப்பேசுகிறார்கள். இந்த கபடம் தெரியாமல் எதையோ பேசி சிக்கிக் கொள்கிறாய்.

எதைக் காக்க முடியாவிட்டாலும் உனது நாக்கை மட்டுமாவது காத்துக்கொள். இல்லா விட்டால் சொல் குற்றத்தில் சிக்கிக்கொண்டு துன்பப்படுவாய் என்பார் வள்ளுவர்.

ஒரு மனிதனின் வாழ்வும் தாழ்வும், உயர்வும் மேன்மையும், வீழ்ச்சியும் மாட்சியும் அவனது நாவில் தான் குடியிருக்கின்றன. அந்த நாக்கிலிருந்து வரும் வார்த்தையை வைத்தே இவற்றை அவர்கள் எடை போடுகிறார்கள்.

ஒருவரிடம் நட்பு கொள்வதும் பகைமை கொள்வதும், உயர்வான மதிப்பைப் பெறுவதும், இகழ்ச்சியடைவதும்கூட இந்த நாக்கினால்தான் வருகிறது.

எனவேதான் ஒருமுறை பேசுவதற்கு முன்பு பலமுறை யோசனை செய் என்றார்கள். எதைக் கொட்டினாலும் அள்ளிவிடலாம், வார்த்தையைக் கொட்டினால் அள்ளமுடியாது.

வில்லில் இருந்து சென்று அம்பும், வாயிலிருந்து சென்ற சொல்லும் இலக்கை தாக்காமல் விடாது. அதைத் திரும்பப் பெறவும் முடியாது. தீயினால் சுட்டாலும் புண்ணாகி ஆறிவிடும், நாக்கினால் சுட்டுவிட்டால் ஆறவே ஆறாது.

சொல்லாத சொல்லுக்கு நீ முதலாளி.. சொன்ன சொல் உனக்கு முதலாளி. இப்படி பல விஷயங்கள் சொல்லைப் பற்றி இருக்கின்றன. எனவே, அதைப்பற்றி பேசுவதற்கு முன்பும் நிதானம் தேவை.

நாம் பேசுவதற்கு மட்டும்தான் நிதானம் தேவை என்றில்லை. பிறர் பேசுவதையும் நிதானமாகக்கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பிறர் பேசும்போது, குறுக்கே பேசுவது, வார்த்தைக்கு வார்த்தை எதிர்வார்த்தை பேசுவது, எதிரில் பேசுபவர் முழுவதும் கேளாமல் உடனே பதில் கூறுவது, எரிச்சல் அடைவது போன்றவற்றைச்செய்யாமல், எதிரில் இருப்பவர் என்ன பேசுகிறார் என்பதை முழுமையாகக் கேட்கவேண்டும். நான்கூட உன்னிடம் பலவழிகளில் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நீ அதை கவனிப்பதில்லை. மாறாக, நீ மட்டுமே என்னிடம் பேசுவதாக நினைத்து புலம்பிக் கொண்டு இருக்கிறாய்.

எனக்கு நைவேத்தியம் வைத்தது, என் கோயில் செலவுக்குப் பணம் அனுப்பியது, உதவி செய்தது என எல்லாவற்றையும் என்னை உன் உள்ளே வைத்துக்கொண்டே சொல்லிக் காட்டுகிறாய்.. இதனால் உனக்கு எந்தப் பலனும் இல்லை.. நீ பத்து லட்ச ரூபாயைக் கூட தந்திருக்கலாம், உன் சொத்துக்களைக்கூட எனக்கு எழுதி வைத்திருக்கலாம்

. அதை வெளியே சொல்லும் போது, ஷேர் மார்க்கெட் சரிந்ததைப் போல புண்ணியம் அனைத்தும் சரிந்து விடுகிறது அல்லவா? இதை எண்ணிப் பார்க்காமலேயே எதையும் பேசுகிறாய்..

இனிமேல் நீ யாரிடம் பேசினாலும், பேசுவதற்கு முன்பு இதைப் பேசலாமா?

வேண்டாமா என்பதை பலமுறை யோசனை செய்.. புறங்கூறுதல் அதாவது ஒருவரைப் பற்றி பின்னால் பேசுவது, பிறரைத் தூற்றி எதிரில் இருப்பவரை புகழ்ந்து பேசுவது, காரியத்தை சாதித்துக் கொள்ள நயந்து பேசுவது போன்றவற்றை விட்டுவிடு.

உண்மையை உள்ளபடி சொல், பொய்யைச் சொல்லும் அவசியம் வருவதைத் தவிர்த்துவிடு..பிறர் உன்னை ஆதிக்கம் செலுத்தும் வகையில் பிறரை அதிகமாக உன்னிடம் பேசவிடாதே- நீயும் பிறரிடம் சிக்கிக் கொள்வதைப் போல பேச்சை விட்டுவிடாதே!

மனைவியே கணவனை ஏமாற்றி சொத்துக்களை பிடுங்கிக் கொள்வதும்,
மனைவி அல்லாது பிற மாது சகவாசம் உள்ளவர்கள் தங்கள் சொத்துக்களை இழப்பதும், தெரிந்தவர்கள், நண்பர்கள் என ஜாமீன்
 நின்று அனைத்தையும் இழப்பதும், எதற்கும் முன் நின்று வாக்குக் கொடுத்து சிக்கிக்கொள்வதும் உனக்கு வேண்டாத வேலைகள்.

என்னிடம்கூட வேண்டிக்கொள்ளும்போது நான் இதைச் செய்கிறேன், நீ எனக்கு இதைச் செய் என பொருத்தனை செய்யாதே! அப்படி செய்தால், நான் உன்னை சோதிப்பேன்..

அரிச்சந்திரன் சிக்கிக் கொண்டதைப் போலவும், தர்மன் காட்டுக்குப் போனதைப் போலவும் நீ சிக்கி அல்லல் படுவாய்..

இப்படிச் சொல்லாமல், இரக்கம் உள்ள தந்தையே எனக்கு இதைச் செய் என்று சொல், போதும்! நீ வேண்டியதை நான் செய்வேன். அதன் பிறகு உனக்கு மனம் இருந்தால் எனக்கு சேவை செய்.. இல்லாவிட்டால் விட்டுவிடு..

இன்றிலிருந்து வார்த்தைகளை வெளியே அதிகம் கொட்டாதே!

என் வார்த்தை களின் மீது நம்பிக்கை வை!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tommorrow saibaba mandhiram for Thursday special


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->