வருகிறது தைப்பூசம்... முருகனை வழிபட தயாராகி விட்டீர்களா?!
Tomorrow thaipoosam vazhipadu
தைப்பூச வரலாறு:
அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுளான முருகன் கையில் வேல் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
இவ்விழா தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தைப்பூசம் வருகிறது. இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.
இந்த ஆண்டு (2022), தைப்பூசம் திருநாள் அன்று பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்தில் உள்ள கோயில்களில் தைப்பூசம் திருநாள் அன்று பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
எனவே இந்த சூழ்நிலையில் முருகனை மனதார நினைத்து வரவிருக்கும் தைப்பூசத்தை வீட்டில் எளிமையாகவும், பாதுகாப்பாகவும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.
தைப்பூச வரலாறு :
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. அதனால் பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.
எங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே எங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒருவரை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.
கருணைக் கடலான சிவபெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன் என்னும் முருகன் ஆவார்.
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகள் ஆறு அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தார்.
அன்னை பார்வதிதேவி ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.
அம்பாள் அளித்த வேல்-ஐ ஆயுதமாகக் கொண்டே முருகன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அசுரர்களை திருச்செந்தூரில் வதம் செய்து தேவர்களை பாதுகாத்தார்.
அதனால் முருகரைப் போலவே அவரது வேலுக்கும் தனி சக்தியுண்டு. அசுரர்களை வதம் செய்ய உதவிய முருகப்பெருமானின் வேல்-ஐ பூஜிப்பதாலேயே தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
சிறப்புகள் :
தைப்பூசத்திருநாளில் முருகக்கடவுளிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக அவர் சன்னதி வந்து காணிக்கைகளை அவருக்கு செலுத்தி பூஜை செய்வதை தான் தைப்பூச திருநாளின் சிறப்பாகும்.
வாழையோ, நெல்லோ, பழங்களோ தமது இடத்தில் எது விளைந்தாலும் தான் உண்பதற்கு முன் அதை இறைவனிற்கு அர்ப்பணித்துப் படைப்பதற்கும், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக அர்ப்பணிப்பதற்கும், பயணிக்கும் விரத விழாவே தைப்பூச திருவிழாவாகும்.
முருகனின் அறுபடை வீடுகளில் பழனிக்கே மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு நடைபயணமாக செல்வது தொன்று தொட்ட வழக்கமாக இருக்கிறது.
தைப்பூசத்தில் கோவில்களில் தெப்ப உற்சவம் நடைபெறும். கோவிலில் இருக்கும் கடவுளை தேரில் வைத்து ஊர்வலமாக தெரு முழுவதும் அழைத்து வருவர். இந்த நன்னாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.
மிக சிறப்பு வாய்ந்த இந்நாளில் எல்லாம் வல்ல முருகப்பெருமானிடம் நம்முடைய அனைத்து துயரங்களும் நீங்க பிரார்த்திப்போம்...!
English Summary
Tomorrow thaipoosam vazhipadu