வைகாசி விசாக திருவிழா - பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.!
vaikasi vishaka festival in palani temple
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஒவ்வொரு வருடமும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மிகவும் சிறப்பு பெற்ற இத்திருவிழா பழனியில் வருகிற 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதை முன்னிட்டு அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜை நடக்கிறது. இதைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு விழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது. மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினசரி காலையில் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருவுலா நடைபெற உள்ளது.
மேலும் இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் ஆறாம் நாளான 21-ந் தேதி இரவு 6 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
அடுத்த நாள் 22-ந்தேதி வைகாசி விசாக நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்து அருள்கிறார். இதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு மேல் திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறுகிறது. இறுதிநாளான 25-ந்தேதி கொடி இறக்குதலுடன் இந்த விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
English Summary
vaikasi vishaka festival in palani temple