திருமணத்திற்கு வசியப் பொருத்தம் மிகவும் அவசியமா?
vasiya poruththam
கணவன், மனைவி இருவருக்குள் அன்யோன்யம் இருக்குமா, இல்லையா என்று பார்ப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் உதவுகிறது. கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பில் இணைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.
வசியப் பொருத்தம் உள்ள தம்பதிகள் வாழ்க்கை முழுவதும் அன்புடனும், நிம்மதியுடனும் வாழ்வார்கள். இப்பொருத்தம் அமைவதன் மூலம் தம்பதியர் ஒருவருக்கொருவர் வசியமாகி, எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் பூரண அன்புடன் இனிய வாழ்க்கை நடத்துவார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தில் மனதை இயங்கச் செய்வதே சந்திரன் என்பதாலும் சந்திரன் ராசியதிபதி ஆவதாலும் இத்தகைய வசியப் பொருத்தத்தின் படி திருமணம் செய்தால் பரஸ்பர மனப்பொருத்தம் இல்லாத தம்பதிகளுக்கு கூட நாளடைவில் ஒருவரை ஒருவர் பிரிக்க முடியாத அன்பும், பிணைப்பும், உறவும் கொண்டு தமது வாழ்நாள் முழுவதும் மனம்மகிழ்ந்து ஆனந்தமயமான வாழ்க்கை நடத்திக் கொள்வார்கள். இதற்காகத்தான் வசியப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட ராசி வசியப் பொருத்தமாக உள்ளது. அந்த வகையில் பெண் ராசிக்கேற்ற வசியப் பொருத்தம் உள்ள ஆண் ராசிகள்.
அவை :
1. மேஷம் - சிம்மம், விருச்சிகம்
2. ரிஷபம் - கடகம், துலாம்
3. மிதுனம் - கன்னி
4. கடகம் - விருச்சிகம், தனுசு
5. சிம்மம் - மகரம்
6. கன்னி - ரிஷபம், மீனம்
7. துலாம் - மகரம்
8. விருச்சிகம் - கடகம், கன்னி
9. தனுசு - மீனம்
10. மகரம் - கும்பம்
11. கும்பம் - மீனம்
12. மீனம் - மகரம்.
பெண் ராசி ஆண் ராசிக்கு வசியம் என்றால் வசியப் பொருத்தம் உண்டு. பெண் ராசி ஆண் ராசிக்கு வசியம் இல்லை என்றால் வசியப் பொருத்தம் இல்லை.
இதில் பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமானால் உத்தமம்.
ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்திமம்.
பத்து பொருத்தங்களில் மற்ற எல்லா பொருத்தங்களும் இருந்து வசியப் பொருத்தம் இல்லை என்றாலும் ஜாதகத்தை சேர்க்கலாம் என்பது ஒரு பொதுவான கருத்து. வசிகரிக்கக்கூடிய சுக்கிரனும், மனதுக்கு காரகனாகிய சந்திரனும் மற்றும் அவரவர்களின் ஜாதகத்திற்குரிய புத்தி ஸ்தானமான 5ம் ஸ்தானத்தையும் பொறுத்துத்தான் அமைகிறது.
அவரவர்களின் ஜாதகத்தில் உள்ள ஆயுள் ஸ்தானத்தையும் ஆயுளுக்கு காரகனாகிய சனி பகவானும் லக்னாதிபதி பலத்தையும் பொறுத்துதான் ஆயுளை தீர்மானிக்க வேண்டும். அதுபோல தான் வசியப் பொருத்தம் என்பது ஜோதிட சாஸ்திரப்படி அவை ஒரு பொது விதியே தவிர அதுதான் முக்கியம் என்பது இல்லை.