நமது வாழ்வை வரமாக மாற்றும்... ஸபலா ஏகாதசி... விஷ்ணுவை வழிபட மறவாதீர்கள்..!! - Seithipunal
Seithipunal


ஸபலா ஏகாதசி:

ஏகாதசி என்பது மாதந்தோறும் வரும்; விரதத்துக்கு உரிய ஓர் அற்புதமான நாள். ஒவ்வொரு ஏகாதசி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. அது அந்த ஏகாதசி திதியின் தன்மையைச் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தை மாத தேய்பிறை ஏகாதசி ஸபலா ஏகாதசியாகும். இது ஒரு பாவ நிவர்த்தி கொடுக்கும் நாளாகும். இந்த தினத்தில் பழங்களை தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை நமக்கு கிடைக்கும். இல்லறம் இனிக்கும். தை மாத ஏகாதசியில் பெருமாளை விரதமிருந்து வணங்குவதால் சகல செல்வங்களுடனும், நோயின்றி ஆரோக்கியமாகவும் வாழலாம்.

புராணக்கதை :

மாஹிஷ்மதன் எனும் மன்னனின் மூத்தமகன் லும்பகன். பாவங்களுக்கு எல்லாம் இருப்பிடமானவன். தந்தையின் செல்வத்தை தனது சுகபோகங்களுக்காக செலவு செய்து வந்தான். இதனால் மன்னனின் உத்தரவின் பேரில் லும்பகன் காட்டில் விடப்பட்டான். காட்டுக்குச் சென்றும் லும்பகன் திருந்தவில்லை. அவ்வப்போது நகரத்துக்குள் நுழைந்து திருட ஆரம்பித்தான். ஒரு நாள் காவலர்களிடம் அகப்பட்டுக் கொண்டான். அவனை அடித்துத் துவைத்தார்கள் காவலர்கள்.

அடிபட்ட லும்பகன் திருந்தினான். இனி, திருடக்கூடாது என்று முடிவெடுத்தான். ஒரு மரத்தடியில் வசிக்கத் தொடங்கியவன், காட்டில் கிடைத்த கனிகளையும், கிழங்குகளையும் உணவாகக் உட்கொண்டான். அந்த உணவுகள் போதுமானதாக இல்லை. ஆகவே, உடல் மெலியத் தொடங்கியது. விரைவில் குளிர் காலமும் வந்தது.

ஒரு நாள் லும்பகனுக்கு ஏதும் கிடைக்கவில்லை. அந்தி சாயும் வரை அலைந்து திரிந்தும் ஒரு சில பழங்கள்தான் கிடைத்தன. மரத்தடிக்குத் திரும்பிய லும்பகன், இரவு முழுவதும் குளிராலும், பசியாலும் வாடினான். தூக்கம் வரவில்லை. கிடைத்த ஒரு சில பழங்களையும் பகவானுக்கே அர்ப்பணம் செய்தான்.

பொழுது விடிந்தது. ஆகாயத்தில் ஓர் அசரீரி ஒலித்து, 'லும்பகா! நேற்று ஸபலா ஏகாதசி. நீ தங்கியிருந்தது அரச மரத்தின் அடியில் இரவு முழுவதும் நீ தூங்கவில்லை. கிடைத்த பழங்களையும், பசியோடு இருந்தும் நீ உண்ணவில்லை. பகவானுக்கு அர்ப்பணம் செய்தாய். இந்த பலனால் உன் பாவங்கள் அனைத்தும் பறந்தோடின. காட்டை விடு நாடு திரும்பு. அரச பதவி உனக்குத்தான்!" என்றது.

அசரீரி சொன்னது போல், லும்பகனின் எதிரில் அவன் நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், பட்டத்து யானையுடன் வந்தனர். 'மன்னர் மறைந்துவிட்டார். தாங்கள் வந்து தரணி ஆள வேண்டும்!" என்று வேண்டிக்கொண்டனர். அவனைப் பட்டத்து யானையின் மேல் ஏற்றிப் பரிவோடு அழைத்துச்சென்று, பட்டாபிஷேகம் நடத்தி வைத்தார்கள்!

யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போதே அந்தப் பாவம் அகன்றுவிடும் என்று வேதம் கூறுகிறது. அப்படி தவறுக்காக வருந்தி, பகவானிடம் தன்னைச் சமர்ப்பிப்பவருக்கு இறையருள் கைகூடும் என்பதற்கு சான்றான கதை இது.

லும்பகன் வணங்கிய ஏகாதசி தை மாதம் வரும் தேய்பிறை ஏகாதசியான ஸபலா ஏகாதசி ஆகும். நாம் அறிந்தும் அறியாமலும் எவ்வளவோ தவறுகள் செய்கிறோம். அவற்றின்படி பகவானிடம் மனம் திறந்து மன்னிப்பு வேண்டி, இந்த புனிதமான ஸபலா ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். அதன் மூலம் நம் பாவங்கள் அனைத்தும் விலகி, நமது வாழ்வே வரமாக மாறும்படி செய்வார் மகாவிஷ்ணு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishnu special yegadhasi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->