நாளை 'ஆடி' முதல் வெள்ளிக்கிழமை .. அம்மனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா..?!
Worship Method and Benefits Of Aadi Friday
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்று கூறப்படுவதுண்டு. இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் ஒரு விதத்தில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் ஆடி வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. அதுவும் ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நாளை அம்மனை எந்த நேரத்தில் எப்படி வழிபட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
ஆடி வெள்ளியில் அம்மனை வழிபடும் முறை :
ஆடி வெள்ளி வழிபாடு இரண்டு விதமாக செய்யலாம். முதலாவதாக கடன் பிரச்சினை, தீராத நோய், குடும்ப பிரச்சினைகள், அக்கம் பக்கம் உள்ளவர்களால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் வழக்குகளில் வெற்றி காண ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று ராகு காலத்தில் வழிபட வேண்டும்.
இதற்கு ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி செவ்வரளிப் பூக்களால் கோவிலில் அர்ச்சனை செய்ய வேண்டும். கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் வீட்டிலேயே வெறும் அரளிப் பூக்களை வைத்து அர்ச்சனை செய்யலாம்.
இரண்டாவதாக வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி, செல்வம் தங்க, நிம்மதியான வாழ்க்கை அமைய , மகாலட்சுமியின் அருள் வீட்டில் நிறைந்திருக்க ஆடி முதல் வெள்ளிக்கிழமை வரும் சுக்கிர ஓரையில் வழிபட வேண்டும்.
இதற்கு சுக்கிர ஓரை நேரத்தில் மகாலட்சுமிக்கு பால் மற்றும் கற்கண்டு படைத்து தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலேயோ செய்யலாம்.
மேலும் ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று விளக்கேற்றி, அதில் குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு முன்பு கோவிலுக்குச் சென்று வரவேண்டியது அவசியம். இதனால் அனைத்து தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். காலை அல்லது மாலை இரண்டு நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் இந்த பூஜையை செய்யலாம்.
English Summary
Worship Method and Benefits Of Aadi Friday