காமன்வெல்த் போட்டிகளில் ஒரே நாளில் மூன்று தங்கப்பதக்கங்கள் - பாமக தலைவர் வாழ்த்து.!
Dr Anbumani Ramadoss Wish to Common wealth team india aug
காமன்வெல்த் போட்டிகளில் ஒரே நாளில் மூன்று தங்கப்பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில், "பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மல்யுத்த ஆட்டத்தில் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, சாக்ஷி மாலிக் ஆகிய மூவரும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஒரே நாளில், ஒரே ஆட்டத்தில் மூன்று தங்கப் பதக்கங்களை இந்தியாவுக்கு வென்று கொடுத்த மூவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.
மல்யுத்தப் போட்டிகளில் அன்ஷு மாலிக் வெள்ளி, திவ்யா காக்ரன், மோகித் கிரேவால் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளனர். மல்யுத்தத்தில் மட்டும் ஒரே நாளில் இந்தியர்கள் 6 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கும் பாராட்டுகள்!
ஒரே நாளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தடகளம், ஹாக்கி, பாட்மிண்டன் போட்டிகளிலும் இந்தியா வெற்றிகளைக் குவித்து பதக்கப்பட்டியலில் மேலும் முன்னேற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதேபோல், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள வாழ்த்து செய்தி ஒன்றில், "உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மும்முறைத் தாண்டுதலில்(Triple Jump) வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் திரு.செல்வ பிரபு திருமாறன் அவர்களை மனமார பாராட்டுகிறேன்.
மும்முறைத் தாண்டுதலில் முதன்முறையாக இந்தியாவுக்கு பதக்கம் வென்று சாதனை புரிந்திருக்கும் திரு.செல்வ பிரபு தடகளத்தில் உலக அளவில் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Wish to Common wealth team india aug