தொடரை கைப்பற்றுமா இந்தியா? இன்று இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் மோதும் கடைசி ஒருநாள் போட்டி.!
IND vs WI 3rd odi match today
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில், முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2வது ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மேலும், ஹார்திக் பாண்டியா அணியை வழிநடத்தினார்.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இரவு 7 மணிக்கு டிரினிடாட்டில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்திய அணி ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் விளையாடி வருகிறது. அதன் காரணமாக இந்திய அணியின் மிடில் ஆர்டரை சோதிக்கும் வகையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தொடரை நிர்ணயிக்கும் போட்டி என்பதால் 2வது போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் ரோகித், விராட் கோலி இருவரும் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறாததால், தற்போது இளம் வீரர்களை வைத்து புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேபோல் சொந்த மண்ணில் தொடரை கைப்பற்ற கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்றை மாற்றுமா வெஸ்ட் இண்டீஸ்
இந்திய அணி கடந்த 2006க்கு வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் ஒருநாள் தொடரை இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, தொடர்ச்சியாக 12 தொடர்களையும் கைப்பற்றியுள்ளது. இந்த 2 அணிகளும் மோதிய 23 ஒருநாள் தொடர்களில் இந்தியா 15-8 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
English Summary
IND vs WI 3rd odi match today