மழை குறுக்கிட்டதால் வெற்றி வாய்ப்பை இழந்த தென்னாபிரிக்கா!
match between South Africa and Zimbabwe ended in a draw
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-12 சுற்றின் இன்றைய 2-வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் ஹோபார்டில் விளையாடின. மழை காரணமாக இரு அணிகளுக்கும் தலா 9 ஓவர் என குறைக்கப்பட்டு ஆட்டம் துவங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா அணி 80 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் தெம்பா பவுமா களமிறங்கினர். முதல் பந்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக், முதல் ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 23 ரன்கள் விளாசினார். இந்த நிலையில் 2வது ஓவரின்போதும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதித்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவின் வெற்றி இலக்கு 7 ஓவரில் 64 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது. மழை நின்ற பிறகு வீசப்பட்ட 2வது ஓவரின் மீதமுள்ள 5 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசினார் டி காக்.
சிக்கந்தர் ராசா மூன்றாவது ஓவரை சிறப்பாக வீசினார். ஆனால் தென்னாப்பிரிக்க அணி அந்த ஓவரில் 11 ரன்கள் எடுத்தது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு அப்போது 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மழை காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. மழையின் காரணமாக ஜிம்பாப்வே அணி தோல்வியில் இருந்து தப்பித்தது.
English Summary
match between South Africa and Zimbabwe ended in a draw