22 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய மண்ணில் சம்பவம் செய்த பாகிஸ்தான்!
PAK vs AUS ODI
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தொடக்க ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 10 அன்று பெர்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா 31.5 ஓவர்களில் 140 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சீன் அப்பாட் 30 ரன்கள், மேத்யூ ஷார்ட் 22 ரன்கள், மற்றும் ஆடம் ஸாம்பா 13 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் ஷா அஃப்ரிடி, நஷீம் ஷா தலா 3 விக்கெட்டுகளும், ஹாரிஸ் ரௌஃப் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
வெற்றி இலக்கான 141 ரன்களை நோக்கி பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றனர். அப்துல்லா ஷஃபீக் 37, சயீம் ஆயுப் 42 ரன்கள் எடுத்தனர். கேப்டன் ரிஸ்வான் 30 ரன்களுடனும், பாபர் அசாம் 28 ரன்களுடனும் பாகிஸ்தானை வெற்றி பாதையில் அழைத்தனர்.
இந்த வெற்றியால் பாகிஸ்தான் அணி 22 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.