இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா; புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா..!
Rohit Sharma creates a new record in international cricket
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது . முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும், குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றனர்.போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும் பெண் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 01 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து 305 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் மற்றும் கில் அதிரடியாக விளையாடினர். கில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். #ரோகித் அதிரடியாக விளையாடி 76 பந்துகளில் சதமடித்து, 119 ரன்களில், ஆதில் ரஷீத் பந்துவீச்சில் அவுட்டானார். விராட் கோலி 05 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன் அவுட்டானார். அடுத்து
களமிறங்கிய கே.எல்.ராகுல் 10 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் அக்சர் மற்றும் ஜடேஜா ஜோடி, இந்தியாவை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது. இதில் அக்சர் படேல் 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் 44.3 ஓவர்கள் முடிவில் 06 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து, இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 03 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 02-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் #ரோஹித் சர்மா சதம் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் 03-வது இடம் பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 48 சதங்கள் அடித்துள்ள டிராவிட்டின் சாதனையை முறியடித்து 49 ஆவது சதத்தை ரோகித் இன்று பதிவு செய்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர்கள்:
1. சச்சின் - 100
2. விராட் கோலி - 81
3. ரோகித் - 49 4.
டிராவிட் - 48
5. சேவாக் - 38
English Summary
Rohit Sharma creates a new record in international cricket