ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கோப்பையை வெல்லுமா இளம் இந்தியா.!
Under19 cricket worldcup Final India Vs England
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியாவும் இங்கிலாந்தும் மோத உள்ளன.
19 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.
16 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரில், அரை இறுதி ஆட்டங்களுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றன.
முதல் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 1998 ஆம் ஆண்டு முதன்முறையாக ஜூனியர் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி அதன் பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து தொடர்ந்து 4-வது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 8-வது முறையாகவும் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என சமபலத்துடன் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 முறை சாம்பியனான இந்தியா 5-வது முறையாக பட்டத்தை வெல்லும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் இரண்டாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் இந்திய அணிக்கு சவால் கொடுக்க காத்திருக்கிறது.
English Summary
Under19 cricket worldcup Final India Vs England