கொளுத்தும் வெயில் - தொடக்கப்பள்ளித் தேர்வு அட்டவணையில் மாற்றம்..!
1 to 5 class exam time table changes in tamilnadu
தமிழகம் முழுவதும் ப்ளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில், நடுநிலைப் பள்ளிகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனால், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து 1 முதல் 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே ஆண்டுத் தேர்வுகளை நடத்த உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என்றுத் தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
1 to 5 class exam time table changes in tamilnadu