கடலூர் வண்ணாரபாளையத்தில் வித்தியாசமான கட்டிடம்; மனைவிக்காக கப்பல் போல் வீடு கட்டிய கணவர்!
A differ The husband who built a house like a ship for his wife
கடலூரைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் கார்கோ ஷிப் எனப்படும் சரக்கு கப்பலில் கடந்த 15 ஆண்டுகளாக மெரைன் என்ஜினியராக வேலை செய்து வருகிறார். நீண்ட நாட்களாக அவரது மனைவி சுபா, கப்பல் போல வீடு கட்ட வேண்டும் என கூறி வந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து சுபாஷ், கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரபாளையம் என்ற பகுதியில் 11 ஆயிரம் சதுர அடியில் ஒரு இடத்தை வாங்கி, அதில் 4 ஆயிரம் சதுர அடியில் மனைவி விருப்பப்பட்டபடி கப்பல் போன்று வீடு ஒன்றைக் கட்டத் துவங்கினார் சுபாஷ்.
வீட்டின் கட்டிட பணிகள் முடிவடைந்த பிறகு நேற்று முன்தினம் புதுமனை புகுவிழா நடைபெற்றது. பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த வீட்டினைச் சுற்றி தண்ணீர் தேங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டினுள் நுழைய கப்பலில் உள்ளதைப் போல படிக்கட்டுகள் அமைத்து அதன் வழியாக 6 அறைகளை கட்டி, இந்த வீட்டின் உள்ளே நுழையும் பகுதியை அசல் கப்பல் போலவே வடிவமைத்துள்ளார்.
கூடுதல் சிறப்பாக நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என தனித்தனி அறைகளோடு நன்கு காற்று புகும் வகையிலும் வீடு கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டிலிருந்து வெளிப்புறத்தை பார்ப்பதற்காக கப்பலில் கேப்டன் அமர்ந்து கப்பலை செலுத்தும் விதமாக இருப்பது போன்று ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் கப்பல் செல்வது போன்ற தோற்றம் இரவு நேரங்களில் தோன்றும் விதமாக மின்னொளிகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுமனை புகுவிழா நாளன்று, ‘எஸ்.4 குடும்பம் தங்களை வரவேற்கிறது’ என சுபாஷ் பல்வேறு இடங்களிலும் பேனர்களை வைத்தார். “எங்கள் குடும்பத்தில் என் மனைவி, நான் மற்றும் எங்கள் இரு மகள்கள் என அனைவரது முதல் எழுத்தும் எஸ் என்று தொடங்குவதால் நாங்கள் எஸ்.4 குடும்பம் என்று எங்களை அழைத்துக் கொள்கிறோம்” என்கிறார் சுபாஷ்.
English Summary
A differ The husband who built a house like a ship for his wife