தமிழ்நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரியாத கோயபல்ஸ் - ஸ்டாலின்! எடப்பாடி பழனிசாமி பகீர் அறிக்கை! - Seithipunal
Seithipunal


உலக வரலாற்றில், ஜெர்மனியின் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயைத் திறந்தாலே வண்டி வண்டியாகப் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடக் கூடியவர். ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற தத்துவத்தைக் கண்டுபிடித்த அந்த கோயபல்ஸ்-ஐ நம்மில் யாரும் பார்த்ததில்லை. அந்த கோயபல்ஸ்-ன் மொத்த உருவமாக, சந்தர்ப்பவசத்தால் முதலமைச்சரான மு.க. ஸ்டாலினை தமிழக மக்கள் பார்ப்பதாக, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "திருச்சியில் 26.7.2023 அன்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில், கொத்தடிமைகளின் தலைவராக விளங்கும் திரு. மு.க. ஸ்டாலின், மனம் போன போக்கில் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.

"இந்த (திமுக) ஆட்சியின் தவறுகளை எந்தக் கொம்பனாலும் கண்டுபிடிக்க முடியாது” என்று மார்தட்டுகிறார். "திமுக-வினர் தவறுகள் செய்வதில் கொம்பாதி கொம்பர்கள்... விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் சூராதி சூரர்கள்... இவர்களின் தவறுகளை சாதாரண மக்களும், கொம்பனும், சூரனும் எப்படி கண்டுபிடிக்க முடியும்” என்று கூறி தமிழக மக்கள் சிரிக்கிறார்கள்.

"எங்களுக்குள் தவறுகள் இருக்கலாம், ஆட்சியில் தவறுகள் இல்லை" என்றும் அதிமேதாவிபோல் திரு. ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்திருக்கிறார்.

தவறுகளின் மொத்த உருவமே ஆட்சி செய்யும்போது, அவரது கட்சியினர் சும்மாவா இருப்பார்கள் ? தன் கட்சிக்காரர்களை அடக்க; கண்டிக்க வக்கில்லாத திரு. ஸ்டாலின், அதே கூட்டத்தில் நம்மீது பாய்ந்து பிராண்டி இருக்கிறார்.

"மத்திய அரசை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஏதாவது வாயை திறக்கிறாரா ? வழக்குகளை காட்டி மிரட்டி பிரதமர் எடப்பாடியை பணிய வைத்துள்ளார்" என்று போகிற போக்கில் சேற்றை வாரிப் பூசும் வேலையை ஸ்டாலின் செய்துள்ளார்.

தி.மு.க. அமைச்சர்கள் உட்பட பலர் சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றத்தில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. இலாக்கா இல்லாத மந்திரியாகவே ஒரு நபர் ஜெயிலில் இருக்கிறார். அமலாக்கத் துறை வழக்குகள் மற்றும் ரெய்டுகள் பல திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது உள்ளது. மேலும், இவர்கள் மாநிலத்தில் ஆளும் கட்சியாகவும், அதே சமயத்தில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியிலும் பங்கு பெற்றிருந்த போதே, இவர்கள் மீது CBI வழக்குகள் இருந்ததை திமுக தலைவர் வசதியாக மறந்துவிட்டார் போலும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்கள் மீதும், கழக நிர்வாகிகள் மீதும் விடியா திமுக அரசின் ஏவல் துறையால் புனையப்பட்ட, ஜோடிக்கப்பட்ட வழக்குகள்தான் உள்ளனவே தவிர, மத்திய அமலாக்கத் துறை வழக்குகள் ஏதும் இல்லை.

திருவிழா கூட்டத்தில் திருடிக்கொண்டு ஒடுபவன், திருடன் திருடன் என்று கத்திக் கொண்டே ஓடுவான். அதுபோல் 26.7.2023 அன்று, திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மேல் உள்ள, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பணப் பரிமாற்றம் பற்றி விசாரிக்கும் அமலாக்கத் துறையின் வழக்குகளை மறைக்க, எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி எங்களைப் பற்றி அவதூறாகக் கூறியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் விடியா அரசின் முதலமைச்சருக்கு, வரும் காலத்தில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

'விளம்பரத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது' என்ற புரட்சித் தலைவர் வாக்கை, தற்போதைய நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

மேலும், மணிப்பூர் சம்பவம் குறித்து நான் ஏதும் பேசவில்லை என்று நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூர் கலவரம் துவங்கிய உடனேயே அதனைக் கண்டித்தும், கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அங்குள்ள தமிழர்களை பாதுகாப்பாகக் காப்பாற்ற வேண்டும் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 8.5.2023 நாளிட்ட அறிக்கை மூலம் விடியா திமுக அரசின் முதலமைச்சருடைய கவனத்தை ஈர்த்திருந்தேன்.

குறிப்பாக, மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவம் குறித்து நான், எனது கடுமையான கண்டனத்தை 21.7.2023 அன்றே தெரிவித்திருந்தேன். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் வெளியிடும் அறிக்கைகள் மற்றும் ட்விட்டர் பதிவுகள் போன்றவற்றைக்கூட தன்கீழ் உள்ள காவல் துறை மூலம் தெரிந்துகொள்ள வக்கில்லாத முதலமைச்சர், மணிப்பூர் சம்பவத்தைப் பற்றி நான் பேசவில்லை என்று தனது நிதியமைச்சர் மூலம் 22.7.2023 அன்று பேட்டி அளிக்க வைத்ததும், பிறகு, 26.7.2023 அன்று பகிரங்கமாக திருச்சி பொதுக்கூட்டதில் பேசி இருப்பதும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருப்பதை தமிழக மக்களிடையே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதிலும், குறிப்பாக, பெண்கள் பாதுகாப்புடன் நடமாட வேண்டும் என்று காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டத்தின் ஆட்சியை நடத்தியது. தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டு எனது தலைமையிலான ஆட்சியில், பாலியல் வன்கொடுமை குற்றங்கள் - 7. ஆனால், விடியா திமுக அரசின் 2022-ஆம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பின்படி நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை குற்றங்கள் - 58. இதில் இருந்தே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.

எனவே, இனியாவது சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பற்றத் தன்மை, போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறுதல் போன்றவற்றிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தும்; கடும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியும், வாக்களித்த தமிழக மக்கள் சிரமமின்றி வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று தமிழக அரசை எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Condemn to DMK MKSalin For Manipur Issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->