அதிமுக எம்.எல்.ஏ தலைமையில்.. தடையை மீறி நாளை உண்ணாவிரதம்.!! விவசாயிகள் அதிரடி முடிவு.!!
AIADMK MLA leads hunger strike tomorrow against NLC
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனம் நிலக்கரி பற்றாக்குறையை காரணம் காட்டி வளையமாதேவி மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நிலக்கரி சுரங்கம் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது. இதற்காக விவசாய நிலங்களில் நெற்பயிர்களை அழித்து கால்வாய் அமைக்கும் பணியை என்எல்சி நிர்வாகம் கடந்த 4 நாட்களாக ஈடுபட்டு வருகிறது. என்எல்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்து இருந்தார்.
என்எல்சி நிர்வாகத்தின் அராஜக நடவடிக்கைக்கு கடலூர் மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையின தடியடி நடத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் பாமகவை சேர்ந்த 26 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பேருந்து கண்ணாடிகளை உடைத்ததாகவும் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் 2000கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு என்எல்சி நிறுவனத்திற்கு ஆதரவாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தலைமையில் வளையமாதேவியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்காக நேற்று சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
தற்பொழுது என்எல்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் மாவட்டம் முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுவதால் அனுமதி வழங்க முடியாது என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புவனகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தலைமையில் விவசாயிகள் காவல்துறையுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் வேறு இடத்தில் அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி கடலூர் மாவட்டத்தில் அனுமதி வழங்க முடியாது என காவல்துறை மறுத்துள்ளது.
இதன் காரணமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் மற்றும் விவசாயிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் காவல்துறையினரின் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
AIADMK MLA leads hunger strike tomorrow against NLC