தமிழர்கள், தமிழ் மரபுக்கு எதிரான காங்கிரஸின் சுயரூபமும் வெளிவந்துடுச்சு - டிடிவி தினகரன்!.
AMMK TTV Dhinakaran Condemn to INDI Alliance for Sengol issue
பாராளுமன்றத்தில் நீதியின் அடையாளமாக நிறுவப்பட்டிருக்கும் பாரம்பரியமிக்க செங்கோலை அகற்றக் கோரும் சமாஜ்வாதி கட்சியின் நடவடிக்கைக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "நேர்மையான, நியாயமான மற்றும் நடுநிலையான ஆட்சியை வழங்குவதன் அவசியத்தை உணர்த்தும் செங்கோலுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கும் உயரிய மரியாதை, தமிழர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமையடையச் செய்திருக்கிறது.
மக்களவையில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை வைக்க வேண்டும் என்று கோருவதற்கு சமாஜ்வாதி கட்சிக்கு முழு உரிமை உண்டு என்றாலும், இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான செங்கோலை அகற்றியே ஆக வேண்டும் என்ற அக்கட்சியின் கருத்து பண்டையகால தமிழ் மரபிற்கும், தமிழ் மக்களுக்கும் எதிரானதாக அமைந்துள்ளது.
அதேவேளையில், சமாஜ்வாதி கட்சியின் கருத்தை வரவேற்றிருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் தமிழர்கள் மற்றும் தமிழ் மரபுக்கு எதிரான சுயரூபமும் வெளிவந்திருக்கிறது.
நீதியின் சின்னமாகவும், தமிழர்களின் பெருமையாகவும் திகழும் செங்கோலை அகற்றக்கோரும் சமாஜ்வாதியின் கருத்திற்கு எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்காமல் தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விடுத்த கண்டன செய்தியில், "செங்கோலை, பாராளுமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று, மாண்புமிகு சபாநாயகர் அவர்களிடம், சமாஜ்வாதி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.சௌத்ரி கடிதம் எழுதியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. செங்கோல், சுதந்திரத்தின்போது நேருவுக்கு வழங்கப்பட்டது. பின், அதன் முக்கியத்துவம் அறியாமல் காட்சிப் பொருளாக்கப்பட்டது. அதை பலரும் சுட்டிக்காட்டிய நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோலை வைத்து மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
திருவள்ளுவருக்கு சிலை வைத்தோம், மாநாடு வைத்து தமிழ் வளர்த்தினோம் என்று நொடிக்கு நொடி கூறிக் கொள்கிற போலி திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இவர்கள் நிரூபித்து விட்டார்கள். இவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள் என்பதை தமிழக மக்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள். நமது தாய் நாட்டின் தொன்மை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இந்தி கூட்டணி தலைவர்களுக்கு எனது கடுமையான கண்டனங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள கண்டன செய்தியில், "பாராளுமன்றத்திலிருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என "INDI' கூட்டணியினர் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழர் கலாச்சாரத்தை, பண்பாட்டை அழிக்க நினைக்கும் காங்கிரஸுக்கு துணை போகிறது திமுக. நீதியின் அடையாளம், செங்கோலை அகற்றி அநீதியை புகுத்தும் காங்கிரஸ் கூட்டணியின் முயற்சி பலிக்காது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
AMMK TTV Dhinakaran Condemn to INDI Alliance for Sengol issue