உங்கள் மீது சிபிஐ விசாரணை கோருவதில் என்ன தவறு? எதற்காக இப்படிப் பதறிப் பாய்கிறீர்கள் முதல்வரே?! அண்ணாமலை விளாசல்! - Seithipunal
Seithipunal


தொட்டுப் பார். சீண்டிப் பார் என்று, இரண்டாம் கட்டப் பேச்சாளர் போல பேசுவது ஒரு முதல்வருக்கு அழகா? என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தொட்டுப் பார். சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது, கட்சி மேடைகளிலே, கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்வதற்காக. ஒரு சாதாரண மேடைப் பேச்சாளர் பேசும் தொனி. ஆனால், திரு ஸ்டாலின் அவர்களே, நீங்கள் இப்படிப் பேசுவது, நீங்கள் வகிக்கும் முதலமைச்சர் என்ற பதவிக்கு உகந்ததா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக, பல முறை எதிர்க்கட்சி வரிசையிலும், சில முறை ஆளுங்கட்சியாகவும் சட்டமன்றத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே. சட்ட திட்டங்கள், விசாரணை நடைமுறைகள் அனைத்தும் தெரிந்த. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் சட்டமன்ற அனுபவமிக்க நீங்கள், ஐந்து கட்சி மாறி வந்த ஒருவரைக் காப்பாற்ற இப்படி இரண்டாம் கட்டப் பேச்சாளர் போல பேசுவது முறையா?

தமிழகத்தில் எத்தனையோ குற்றங்கள் நடந்த போது கூட வாய் திறக்காத நீங்கள், கரூரில் கடந்த 26/05/2023 அன்று சோதனைக்கு வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டபோது, கண்டனம் கூடத் தெரிவிக்காத நீங்கள், இந்தக் குறிப்பிட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவருக்காக இப்படிப் பொங்குவது நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகா?

உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். கடந்த 2016 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 18 ஆம் நாள், குளித்தலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் நீங்கள் குற்றம் சாட்டிய, நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகளில் ஒன்றில்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏழு வருடங்களில் என்ன மாறி விட்டது? நீங்கள் கோரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதை உங்கள் கட்சி சார்பாக வரவேற்றல்லவா இருக்க வேண்டும்?

சிபிஐ விசாரணைக்கு முன் மாநில அரசின் அனுமதி வேண்டும் என்று அவசர அவசரமாக முடிவெடுத்துள்ளீர்கள்.

நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கடந்த பல ஆண்டுகளில், அதாவது, மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ள போதே எத்தனை முறை சிபிஐ விசாரணை கோரியுள்ளீர்கள் என்பது நினைவு இருக்கிறதா?

2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம், சென்னை முகலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு சிபிஐ விசாரணை கோரினீர்கள்.

பிப்ரவரி 2015 ல், விவி மினரல்ஸ் நிறுவனத்தின் மேல் சிபிஐ விசாரணை கேட்டீர்கள். மே 201660, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்களில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றீர்கள். அரவக்குறிச்சியில் இதே செந்தில் பாலாஜி அவர்களின் மீதுதான் குற்றச்சாட்டும் வைத்தீர்கள்.

டிசம்பர் 2017, முன்னாள் முதல்வர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மீது சிபிஐ விசாரணை கோரினீர்கள். 2018 ஏப்ரல் - குட்கா விற்பனையில் சிபிஐ விசாரணை

2018 CLD கோரிக்கை குரூப் 1 தேர்வு முறைகேடுகளில் சிபிஐ விசாரணை, 2018 ஜூலை - அன்றைய அமைச்சர்கள் மேல் சிபிஐ விசாரணை கோரிக்கை, கனிம மணல் சுரங்கம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரிக்கை.

2018 ஆகஸ்ட் தமிழக மின்சார வாரியம் நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரிக்கை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை கோரிக்கை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரிக்கை.

2018 செப்டம்பர் -ஸ்மார்ட் சிட்டி திட்ட ஏலம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரிக்கை,
மார்ச் 2019 பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரிக்கை,
ஜூன் 2019 - அதிமுக எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ விசாரணை கோரிக்கை,
செப்டம்பர் 2019 ஆர்கே நகர் தேர்தல் முறைகேடுகள் குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிக்கை,
அக்டோபர் 2019 - நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து சிபிஐ விசாரணைக்குக் கோரிக்கை,
ஜூன் 2020 தூத்துக்குடி லாக்கப் மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கேட்போம் என்ற அறிவிப்பு,

செப்டம்பர் 2020 பிரதமரின், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில், தமிழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரிக்கை.

நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, எத்தனை சிபிஐ விசாரணை கோரிக்கைகள்?

நீங்கள் இப்போது ஆளும் கட்சி ஆனபின்பு சிபிஐ உங்கள் அனுமதி பெற்றுத்தான் உள்ளே வரவேண்டும் என்று சொல்வது நீங்கள் நடத்தி வரும் ஆட்சியின் அவலங்களின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

அது மட்டுமல்ல, உங்கள் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த போது, உங்களுக்கான தனிப்பட்ட தமிழக காவல்துறையின் பாதுகாப்பை நம்பாமல், மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்பைக் கேட்ட வரலாறுகளும் உண்டு. தற்போது என்ன மாறிவிட்டது என்று நினைக்கிறீர்கள்?

யாரை அச்சுறுத்த இத்தனை ஆவேசமான வார்த்தைகள்? உங்கள் கட்சித் தொண்டர்களை எவ்வாறு வழி நடத்துகிறீர்கள்? இது போன்று பேசுவது, தனிச்சிறப்பு வாய்ந்த, பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட நமது மாநிலத்துக்கு உகந்தது கிடையாது.

நீங்கள் எட்டரை கோடி தமிழ் மக்களுக்கான முதல்வரா அல்லது உங்கள் குடும்பத்திற்கும் உங்களைச் சுற்றியுள்ள குறுகிய வட்டத்திற்குமான முதல்வரா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

மற்றவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் சிபிஐ விசாரணை கோரும்போது, நீங்கள் செய்த தவறுக்கு நாங்கள் சிபிஐ விசாரணை கோருவதில் என்ன குற்றம் கண்டீர்கள்? எதற்காக இப்படிப் பதறிப் பாய்கிறீர்கள் முதல்வர் அவர்களே?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai Say About CBI Inquiry to CM Stalin june 2023


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->