ஆம்ஸ்ட்ராங் படுகொலை - சி.பி.ஐ. விசாரணை கேட்டு அமித்ஷாவிடம் தமிழக பாஜக இன்று மனு.!
annamalai say petition to amitsha for cbi investigation in amstrong murder issue
மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் நேற்று முன்தினம் பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தமிழகத்தில் கடந்த 14 நாட்களில் 134 கொலை நடந்துள்ளது. மிகவும் அபாயகரமான சூழலில் நாம் இருக்கிறோம். தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் அரசியல் தலைவர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று முன்னெடுத்துள்ளோம்.
இதுதொடர்பாக டெல்லியில் நாளை அதாவது (இன்று) மத்திய அமைச்சர் எல்.முருகன் பத்திரிகையாளர்களை சந்தித்து விவரங்களை தெரிவிப்பார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு வேண்டுகோள் விடுக்க உள்ளோம். இந்த கொலையை பா.ஜனதாவால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கான விசாரணையை தீவிரப்படுத்துவோம். இந்த செய்தியை நாடு முழுவதும் கொண்டு செல்வோம். ஆம்ஸ்ட்ராங்கிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளோம்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத சூழல் உருவாகி உள்ளது. சென்னை, கூலிப்படைகளின் தலைநகரமாக மாறி உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையில் அடிப்படை வேலைகளை வலுப்படுத்த வேண்டும். சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையர், ரவுடிகளுக்கு புரியும் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். காவல் துறையின் மீது அதிக அழுத்தம் கொடுக்கும்போது, காவல்துறையின் மாநிலமாக தமிழகம் மாறிவிடும். அது கூடாது. என்கவுண்டருக்கு என்கவுண்டர் தான் பதில் என்பது கடந்தகாலம்.
தற்போது, குற்றவாளிகள் சரணடையும் கலாசாரம் உள்ளது. காவல்துறை அதிகாரிகள் குற்றவியல் வழக்கறிஞர்களிடம் பேசி, குற்றவாளிகளை சரணடைய வைக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக காவல்துறை இப்படித்தான் இருக்கிறது. இதனால் உண்மை குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
annamalai say petition to amitsha for cbi investigation in amstrong murder issue