மாணவனுக்கு அரிவாள் வெட்டு - குழந்தைகளிடம் வன்முறை எண்ணம் தலைதூக்கியிருக்கிறது - அண்ணாமலை.!!
annamalai tweet about tirunelveli school student attack
நெல்லையில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- "திருநெல்வேலி, மாவட்டத்தில் உள்ள பாளையம்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பள்ளி மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை கலாச்சாரம் தொடர்ந்து தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. தவறான மனிதர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு, இந்த சிறு வயதிலேயே அரிவாளைக் கையில் எடுக்கும் அளவுக்கு, நமது குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணம் தலைதூக்கியிருக்கிறது என்றால், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், அரசு அனைவருமே இதற்கு பொறுப்பு.
பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றத்தாரையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வளர்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், கடுமையான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க அனுமதிக்காமல், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது திமுக அரசு.

மேலும், உச்ச வரம்பு வைத்து அரசே மது விற்பனை செய்வதாலும், பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தாலும், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதலமைச்சர் மு.க. இனியாவது உணர வேண்டும்.
பள்ளி ஆசிரியர்களால் தங்கள் பணிச்சுமைகளைக் கடந்து, அத்தனை குழந்தைகளையும் கண்காணிப்பது என்பது இயலாதது. பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எப்போதும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பது சமூகத்திற்கே நல்லது.
சரியான வழியில் வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், எதிர்காலத்தில் நூறு குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கிறார்கள். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தங்கள் கண்காணிப்பில் வளர்ப்பது, சமூகத்திற்குச் செய்யும் முக்கியமான கடமை என்பதை உணர்வது நன்று" என்றுத் தெரிவித்தார்.
English Summary
annamalai tweet about tirunelveli school student attack