நாளை சட்டப்பேரவைக் கூட்டம்! சொத்து வரி உயர்வு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்.!
Assembly session starts tomorrow
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நாளை தொடங்குகிறது.
தமிழக பொது பட்ஜெட் கடந்த மாதம் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இவ்விரண்டு பட்ஜெட்கள் மீதான விவாதம் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் நிதி அமைசார் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை அளித்தனர். இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. வரும் மே மாதம் 10 -ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் துறைவாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதற்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளான நாளை நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. விடுமுறை நாட்கள் போக மொத்தம் 22 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது.
சொத்து வரி உயர்வு, நீட்தேர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் மீதான வன்கொடுமை, தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
English Summary
Assembly session starts tomorrow