நடமாடும் நந்தவனம் - ஆட்டோவை தோட்டமாக மாற்றிய நபருக்கு குவியும் பாராட்டுக்கள்.!
auto driver create plants in auto
சென்னை அரசினர் விடுதி அருகே வலம் வந்த ஆட்டோ ஒன்று பச்சை பசேல் என நடமாடும் நந்தவனம் போல் இருந்தது. அந்த ஆட்டோவில் செடி வளர்ப்போம், மழை பெறுவோம். இயற்கையுடன் வாழ்வோம், விழாக்களில் பேனர் வைத்து ரசிக்கும் இளைஞர்களே, மரக்கன்றுகள் நடுங்கள், நாடே பசுமையாகும், தண்ணீர் இல்லையேல் எவ்வுயூரும் இல்லை என்று பல்வேறு வாசகங்கள் எழுதி இருந்தது.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டதற்கு, அவர் கொட்டிவாக்கத்தை சேர்ந்த குபேந்திரன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பேசத்தொடங்கினார். சிறிய வயதில் இருந்தே பசுமை மீது தீராத காதல் இருந்தது. இதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த போது, ஏன் நம்முடைய ஆட்டோவிலேயே அதை செய்தால் என்ன என்று யோசித்தேன்.
அப்புறம்தான் என் ஆட்டோவை தோட்டம்போல் மாற்றி, ஆட்டோவின் முன்னும் பின்னும் தொட்டிகளை வைத்து செடிகளை வளர்த்து வருகிறேன். தோட்டம்போல் இருக்க வேண்டும் என்பதற்காக கூரைப்பகுதியில் செயற்கை புற்களையும், இருக்கையை பசுமை நிறமாகவும் மாற்றினேன்.
என் ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகள், தோட்டத்தில் இருப்பது போன்ற உணர்வு இருப்பதாக என்னிடம் கூறுவார்கள். அவர்கள் ஆட்டோவை விட்டு இறங்கும்போது, பசுமை மீதான ஆர்வம் அவர்களின் மனதை தொட்டு சென்றிருக்கும். இதன் மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் நல்லதுதானே.
இந்த இயற்கை முறையை எல்லோருமே ரசிக்கிறார்கள். பயணிகளும் தங்களுக்கு மன அழுத்தம் குறைந்து விட்டதாகவே சொல்வார்கள். இது எனக்கு மகிழ்ச்சி, ஒரு மன நிறைவு'. எனது ஆட்டோவில் பயணிப்பவர்கள் படிப்பதற்காக திருக்குறள் புத்தகமும் வைத்து இருக்கிறேன் என்றார். ஆட்டோ ஓட்டுனரின் இந்த முயற்சிக்கு அனைவரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
auto driver create plants in auto