வந்தே பாரத் ரெயிலில் திறக்காமல் போன தானியியங்கி கதவு - பயணிகள் தவிப்பு.!
automatic door not open in vade bharat train in dindukal
சென்னையில் இருந்து நெல்லைக்கு வாரத்தில் ஆறு நாட்களும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வழக்கம் போல் நேற்று மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்டது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர். அதன் படி இரவு 7.45 மணி அளவில் திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு வந்த வந்தே பாரத் ரெயிலில் தானியங்கி கதவுகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன.
ஆனால் சி 4, சி 5 உள்ளிட்ட இரண்டு பெட்டிகளின் கதவுகள் மட்டும் திறக்கப்படவில்லை. இந்த பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் மட்டும் திண்டுக்கல்லில் இறங்க முடியாமல் ரெயில் பெட்டிக்குள்ளேயே தவித்தபடி நின்றனர். இது குறித்து அந்த பெட்டியில் பயணம் செய்யும் டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அவர், ரெயில் என்ஜின் ஓட்டுனரைத் தொடர்புகொண்டு பேச முயன்றார். ஆனால் அதற்குள் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நகர தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகளில் ஒருவர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்.
இதனால், திண்டுக்கல் ரெயில் நிலையத்தை கடந்த ரெயில் சில கிலோ மீட்டர் தொலைவில் சென்று பாதி வழியில் நின்றது. இதைத் தொடர்ந்து பயணிகளிடம் பேசிய டிக்கெட் பரிசோதகர், திண்டுக்கல் ரெயில் நிலையத்தைவிட்டு சில கிலோ மீட்டர் தூரம் ரெயில் கடந்து வந்துவிட்டது. அதனால், கொடைரோடு ரெயில் நிலையத்தில் உங்களை இறக்கிவிட்டு, தூத்துக்குடியில் இருந்து மைசூர் நோக்கி செல்லும் ரெயிலில் கட்டணம் இன்றி திண்டுக்கல்லுக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
இதைகேட்டு பயணிகள் சமாதானம் அடைந்தனர். நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் கதவு திறக்கப்படாததால் சுமார் 1½ மணி நேரம் பயணிகள் தவித்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
automatic door not open in vade bharat train in dindukal