தூத்துக்குடி || மண்டல பூஜையில் அய்யப்ப பாடல் பாடிய பக்தர் - நொடியில் நடந்த கொடூரம்.!
ayyappa devotee died electric shock attack in mandala poojai
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரி முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் வெங்கடேசன். ஆறுமுகநேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்த இவர் சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் ஆழ்வார்திருநகரி வாய்க்கால் கரை தெருவில் உள்ள கருணாகர விநாயகர் கோவில் வளாகத்தில் அய்யப்ப சுவாமியின் மண்டல பூஜை விழா நடந்தது. இதில் பங்கேற்ற வெங்கடேசன் மைக் பிடித்து பக்தி பாடலை பாடினார்.
அப்போது மைக் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக பக்தர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த, மருத்துவர்கள் ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, இறந்த வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மண்டல பூஜையில் அய்யப்ப பக்தர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
ayyappa devotee died electric shock attack in mandala poojai