தடை செய்யப்பட்ட இரு விரல் சோதனை.. நீதி விசாரணைக்கு டிஜிபி தயாரா..? வரிந்து கட்டும் பாஜக..!!
BJP questions TN DGP ready for judicial inquiry on two fingers virgin test
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது பதியப்பட்ட குழந்தை திருமணம் தொடர்பான வழக்கில் சிறுமிகளுக்கு உலக அளவில் தடை செய்யப்பட்ட இரு விரல் சோதனை நடத்தப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது பீட்டர் பக்கத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நீதி விசாரணைக்கு தயாராக என கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை செய்ததாக பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன என்றும், அவை உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் ஆகும் என்றும் தமிழக காவல் துறை தலைவர் (டிஜிபி) அவர்கள் கூறியுள்ளது வியப்பளிக்கிறது. சட்டவிரோதமாகமனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளவர் தமிழகத்தின் தலைவர் அல்லது தமிழத்தை ஆட்சி செய்பவரான மேதகு ஆளுநர். ஆனால், டிஜிபி அவர்கள் ஆளுநருக்கு பதிலளிக்காமல் ஊடகங்கள் பரப்புவதாக சொல்வது விசித்திரமாக உள்ளது. வியப்பளிக்கிறது.
மேலும், "சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி, இரண்டு சிறுமியர் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம், பெண் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அவர்களை இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை" என்றும் கூறியுள்ளார் டிஜிபி அவர்கள். குழந்தை திருமணம் நடந்ததாக அளிக்கப்பட்ட புகாருக்கு பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுத்ததோடு நில்லாமல், குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியது ஏன்? குழந்தைகளை வீட்டிலிருந்து வெளியே அழைத்து சென்றது ஏன்? அதற்கு அனுமதி அளித்தது யார்? அந்த குழந்தைகள் தாங்கள் தாக்கப்பட்டதாகவோ அல்லது துன்புறுத்தப்பட்டதாகவோ புகார் அளித்தனரா?
அப்படி புகார் அளிக்கப்பட்டிருந்தால் அதன் முதல் தகவல் அறிக்கை எங்கே? குழந்தை திருமணம் நடத்தியதற்கு மருத்துவ பரிசோதனை செய்ய சட்டத்தில் இடமிருக்கிறதா? உச்ச நீதி மன்றத்தின் அறிவுறுத்தலின் படி குழந்தைகளை எந்த விதமான சோதனைக்கும் உட்படுத்தக்கூடாது என்பது தெரியாதா? அப்படி வீடுபுகுந்து அந்த குழந்தைகளை அழைத்து சென்ற காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? முறையான காரணம் இல்லாமல் குழந்தைகளை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் யார்? அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? சிறு குழந்தைகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டிய அவசியம் என்ன?
சட்டத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறி குழந்தைகளை விசாரணை மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து கடிதம் எழுதியுள்ளதை டி.ஜி.பி மறுப்பாரா? இன்று மறுப்பு தெரிவிக்கும் டி ஜி பி அவர்கள், அந்த கடிதங்களுக்கு, அவர்களின் குற்றச்சாட்டுக்கு அப்போதே மறுப்பு தெரிவிக்காதது ஏன்? குழந்தைகளின் தாயாரை இரவு 11.30 மணி வரை காவல் நிலையத்தில் வைத்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டதை மறுப்பாரா டி ஜி பி? ஆறு மாதங்களுக்கும் மேலாக அந்த குடும்பங்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காதவர் நேற்று திடீரென அதை மறுப்பதற்கென்ன காரணம்?
குற்றச்சாட்டு கடுமையானது என்பதோடு குற்றச்சாட்டை முன் வைத்தவர் ஆளுநர் என்பதாலும், இந்த விவகாரத்தை இன்று சில அமைச்சர்களும் மறுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணையை உறுதி செய்ய சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்த டிஜிபி அவர்கள் தயாரா? அது வரை பாதிக்கப்பட்ட அந்த பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். உண்மைகள் வெளிவர வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்." என பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார்.
English Summary
BJP questions TN DGP ready for judicial inquiry on two fingers virgin test