மொத்தம் 20 கி.மீ இறுதி ஊர்வலம்! ஆம்ஸ்ட்ராங் சவப்பெட்டியில் பொறிக்கப்பட்ட வாசகம்!
BSParty Amstrang Funeral
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஐந்தாம் தேதி இரவு எட்டு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை சம்பவத்தில் மொத்தம் 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயத்தில் இது அரசியல் ரீதியான கொலை இல்லை என்று சென்னை காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் தலைநகரில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்,
மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளதாகவும், தமிழகத்தில் தலித் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதாகவும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சிய அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இது குறித்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு சில அறிவுரைகளை வழங்கியது.
பின்னர் திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே பொத்தூரில் ஒரு ஏக்கர் நிலத்தில் அவரின் உடல் அடக்கம் செய்ய இருதரப்பாலும் முடிவு செய்யப்பட்டது.
சென்னை, பெரம்பூர், பந்தர் கார்டன் பள்ளி வளாகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது உடல் இறுதி ஊர்வலம் ஊர்வலத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பெரம்பூரில் இருந்து அவரின் உடல் அடக்கம் செய்யும் கூடிய பொத்தூர் பகுதிக்கு இடையே சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த 20 கிலோமீட்டர் தூரமும் ஆம்ஸ்ட்ராங் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டுவரப்பட உள்ளது.
இந்த இறுதி ஊர்வலத்திற்கு போலீசார் முழு பாதுகாப்பை அளிக்க ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், தகுந்த பாதுகாப்பை அளிக்க கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குனர்கள் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்கினுடைய சவப்பெட்டியில் சமத்துவ தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் பி.ஏ பி.எல், மாநில தலைவர், பகுஜன் சமாஜ் பார்ட்டி என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.