கோவையில் பூப்பெய்திய பள்ளி மாணவி வெளியில் உட்கார வைத்த விவகாரம் தொடர்பில் 03 பேர் மீது வழக்குப்பதிவு..!
Case registered against 03 people in connection with the incident of making a school girl sit outside in Coimbatore
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் பகுதியில் உள்ள சித்பவானந்தா மெட்ரிக் பள்ளியில், 08-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த 05-ஆம் தேதி பூப்பெய்தினார்.
இந்நிலையில், முழு ஆண்டு தேர்வு நடைபெற்ற 07-ஆம் தேதி மற்றும் 09-ஆம் தேதிகளில் தேர்வு எழுதுவதற்கு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அத்துடன், அவரை வகுப்பறையின் படிக்கட்டில் அமரவைத்து தேர்வு எழுத வைத்ததாக பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதன் காரணமாக பள்ளியின் முதல்வர் ஆனந்தியை பள்ளி நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், வகுப்பறைக்கு வெளியே மாணவி அமர வைக்கப்பட விவகாரம் தொடர்பாக, மாணவியின் தந்தை சுரேந்திரநாத் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன்படி பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி, உதவியாளர் சாந்தி ஆகிய 03 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஏ.எஸ்.பி. சிருஷ்டி சிங் கூறுகையில்; பூப்பெய்திய மாணவிவை வெளியே உட்கார வைத்த விவகாரம் தொடர்பாக பள்ளியில், மாவட்ட பள்ளிக் கல்வி உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் போலீசார்ர் விசாரணை மேற்கொண்டதில், கோவை தனியார் பள்ளியில் மாணவிக்கு தீண்டாமை நடைபெறவில்லை.
தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி தனியே அமர வைக்க, மாணவியின் தாய் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவரை தனியாக அமர வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், தனியாக அமர வைக்க கூறினேனே தவிர, வெளியே தரையில் அமர வைக்க கூறவில்லை என்று மாணவியின் தாய் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Case registered against 03 people in connection with the incident of making a school girl sit outside in Coimbatore