சுற்றித் திரிந்த மாடுகள்! ரூ.62,000/- அபராதம்.! - Seithipunal
Seithipunal


மாடுகளை சாலைகளில் திரிய விட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சியில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி  பொது சுகாதாரத்துறையினரால்  கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை  மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. அவ்வாறு தெருக்களில் சுற்றிதிரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு  அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,550/- விதிக்கப்படுகிறது. 
அதன்படி, மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர், அதனை மாட்டு தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்து செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க சுகாதார ஆய்வாளர், மண்டல நல அலுவலர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்து கொள்ள வேண்டும்.  மூன்றாவது முறையாக ஒரு மாடு பிடிபடும் பொழுது, உரிமையாளருக்கு திரும்ப வழங்கப்படாமல் புளூ கிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும்.
மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.  
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் 10.02.2022 அன்று 16 மாடுகள், 11.02.2022 அன்று 16 மாடுகள் மற்றும் 12.02.2022 அன்று 8 மாடுகள் என மொத்தம் 40 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550/- வீதம் ரூ.62,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இந்த மாடுகள் மாநகராட்சியின் புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.  
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாக பராமரித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையின் மூலம் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai cattle catching


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->