சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாடு கடத்தும் அமெரிக்கா; புகைப்படத்தை வெளியிட்டு எச்சரிக்கை..!
US warns of deportation of illegal immigrants after releasing photo
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டு உள்ளது.
அமேரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும், சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப்படாது என அறிவித்தார். அத்துடன், மெக்சிகோ எல்லையில் அவசர நிலையை பிரகடனம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதன்படி சட்டவிரோதமாக குடியேறிய 538 பேரை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் சிலர் பயங்கரவாதிகள், பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்கள் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் ராணுவ விமானம் மூலம் நாடு கடத்துவதோடு, சட்டவிரோதமாக குடியேறியதாக கைது செய்யப்பட்டவர்கள் விமானத்தில் ஏற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, வெள்ளை மாளிகை அதிகாரி கரோலின் லெவியாட் சமூக வலைதளப்பதிவில் புகைப்படங்களை வெளியிட்டு கூறியுள்ளதாவது; நாடு கடத்தும் விமானங்கள் கிளம்பின. ஒட்டு மொத்த உலகிற்கும் வலிமையான ஒரு செய்தியை அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவினால், நீங்கள் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்வீர்கள் என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.
English Summary
US warns of deportation of illegal immigrants after releasing photo