சென்னையில் கிரிப்டோ கரன்சி முதலீடு என கூறி 11 லட்ச ரூபாய் மோசடி செய்த வடமாநில நபர் கைது! - Seithipunal
Seithipunal



கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் மிக அதிக லாபம்  ஈட்டலாம் என ஆசை வார்த்தைகளை கூறி 11 லட்ச ரூபாய பண மோசடி செய்த வடமாநில நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பணத்தை இழந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில் பண மோசடி செய்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சமீப காலமாகவே நூதன பண மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 

செல்போன் அழைப்பு மூலமோ, வாட்ஸ்-ஆப், டெலிகிராம் போன்ற இணையவழி சேவைகள் மூலமோ மக்களை தொடர்பு கொண்டு, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதன் மூலம் குறைந்த காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தைகளை கூறி பணத்தை பெற்றுவிட்டு ஏமாற்றுகின்றனர். 

பணம் கைமாறிய பின்னர் தான், லாபம் ஏதும் கிடைக்காமல் முதலீடு செய்த பணமும் போய் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை மக்கள் உணர்கிறார்கள். அப்படி ஒரு மோசடி கும்பலிடம் தனது 11 லட்சம் ரூபாய்  பணத்தை சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இழந்துள்ளார்.

வேப்பேரி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இது தொடர்பாக அந்த இளைஞர் புகார் அளித்துள்ளார். புகாரில் செல்போன் மூலம் தன்னை தொடர்புகொண்ட ஒரு நபர் கிரிப்டோ கரன்சி முதலீடு பற்றி பேசி, பல  ஆசை வார்த்தைகளைக் கூறி குறைந்த காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் அனுப்பிய லிங்க்கை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்ட விபரங்களை பதிவு செய்துள்ளார். 

பின்னர் தனது வங்கிக் கணக்கில் சுமார் 11 லட்சம் ரூபாய்க்கு மேல் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய அனுப்பி மொத்தமாக ஏமார்ந்துவிட்டதாக அந்த இளைஞர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடி நபரை தொடர்புகொண்ட செல்போன் எண் மற்றும் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டுப் பெற்றனர்.

பின்னர் அந்த வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் மூலம், அதன் சிக்னலையும் போலீசார் டிராக் செய்தபோது குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் இருந்து பணம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சூரத் விரைந்த தனிப்படை போலீசார், அங்குள்ள ஏடிஎம் மையத்தின் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி மோசடி நபரின் அடையாளத்தை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு, தனிவாலா மெஹபூப் இப்ராஹிம் என்ற நபரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து இருந்து செல்போன், மோசடிக்கு பயன்படுத்திய சிம்-கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இன்னும் எத்தனை பேரிடம் இவர் இதே போல மோசடி செய்துள்ளார் என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது போன்ற பண மோசடிகளில் ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் இதுபோன்ற சைபர் மோசடிகள் தொடர்பான எந்தவித உதவிகளுக்கும், புகாருக்கும் 1930 என்ற அவசர உதவி எண்ணிற்கு அழைக்கலாம் எனவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai crypto currency investment fraud arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->