சென்னை தினம் | தலைவர்களின் நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தி!
Chennai Day Chennai 384
சென்னை மாநகருக்கு இன்று 384-ஆம் பிறந்தநாள். சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி, அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "மெட்ராஸ் தினத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! வியப்பூட்டும் கலாசார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் இந்த தொடர்ச்சியை அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேலும் முன்னெடுத்து கொண்டாடுவோம்" என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விடுத்துள்ள சென்னை நாள் வாழ்த்துச் செய்தியில், "பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார்.
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா - ஊர் என்பதா - உயிர் என்பதா சென்னையை?
சென்னை - ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம்!
வாழிய வள்ளலார் சொன்ன 'தருமமிகு சென்னை' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "சென்னை மாநகருக்கு இன்று 384-ஆம் பிறந்தநாள். சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது. சென்னை நாள் கொண்டாடும் சென்னை மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
தோற்றுவிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த 384 ஆண்டுகளில் சென்னை அடைந்த வளர்ச்சி வியக்கத்தக்கது. இந்திய காவல்துறை இங்கு தான் உருவாக்கப்பட்டது; சென்னை தான் இந்தியாவின் பழமையான (மா)நகராட்சி.
சென்னைக்கு இந்த பெருமைகள் மட்டும் போதாது. இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநகராக சென்னை மாற வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.