மருத்துவப் படிப்பிற்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கு வந்த புதிய சிக்கல்! தமிழக அரசின் முடிவு என்ன?
chennai high court opinion that the government should take the policy decision on mbbs seat reservation
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும் ஏன் விரிவுபடுத்தக் கூடாது?
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த வர்ஷா என்ற மாணவி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால் தனக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வர்ஷா தாக்கல் செய்த மனுவில் "என் தந்தை வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார். நான் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட்தேர்வு எழுதி வந்தேன். முதல்முறை எழுதிய தேர்வில் 210 மதிப்பெண்ணும், இரண்டாவது முறை எழுதிய தேர்வில் 259 மதிப்பெண்ணும் எடுத்துள்ளேன். நான் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் என்னால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இந்த சலுகையை விரிவுபடுத்தி இருந்தால் எனக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்திருக்கும். எனவே என் மனுவை பரிசீலிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த மனுவின் மீது கருத்து தெரிவித்த நீதிபதி "ஏற்கனவே இது போன்ற வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர் . மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது. இதனால் மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது. இதன் காரணமாக மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி "இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்திருந்தாலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்திருந்தாலும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டு சலுகையை விரிவுபடுத்துவது குறித்து அரசு மறுபரிசீலனை செய்து கொள்ளலாம். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் வசதி குறைவான குடும்பங்களை சேர்ந்தவர்கள் தான் படிக்கின்றனர்.
அரசு தான் இது போன்ற பள்ளிகளுக்கு உதவி செய்கிறது. இதன் காரணமாக 7.5% இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்திக் கொள்ளலாம். அரசு தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் கருத்து என உயர் நீதிமன்ற நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதியின் இந்த கருத்தால் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் புதிய சிக்கலை உண்டாக்கும் என கருதப்படுகிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ சேர்க்கை குறைய வாய்ப்புள்ளது. மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களும் இச்சலுகையை பெற முடியாமல் தவிக்கின்றனர். எனவே தமிழக அரசு 7.5% இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்துமா? அல்லது இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
English Summary
chennai high court opinion that the government should take the policy decision on mbbs seat reservation