பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரான்ஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


சென்னைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டு தூதரக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவதற்காக பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் நிலைத்திருத்தலுக்கான நகர முதலீடுகள் (City Investments To Innovate, Integrate and Sustain - CITIIS) திட்டத்தின் கீழ், சென்னை சீர்மிகு நகரத் திட்டத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டு தூதரக அலுவலர்கள், CITIIS மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த தனியார் நிறுவனப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி தலைமையில் இன்று ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் 28 சென்னைப் பள்ளிகளில் பிரான்ஸ் நாட்டு முகமை நிதியுதவியுடன் CITIIS திட்டத்தின் கீழ் ரூ.95.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து தனியார் நிறுவனப் பிரதிநிதிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது.

மேலும், மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டது. 

சென்னைப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், நவீன முறையிலான டிஜிட்டல் வசதிகள், நவீன அறிவியல் ஆய்வகங்களை உருவாக்குதல், மொழி ஆய்வகங்களை உருவாக்குதல், விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மாணவர்களுக்கான இருக்க வசதிகளை மேம்படுத்துதல், கழிவறைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு தனியார் நிறுவனங்களின் சார்பில் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியினை (CSR) வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இக்கூட்டத்தில், ஜே.சி.டெக்காஸ் இந்தியா, TAC எக்கனாமிக்ஸ், சிக்காம் இந்தியா, பைவ்ஸ் இந்தியா இன்ஜினியரிங் அன்ட் பிராஜக்ட் பிரைவேட் லிமிடெட், டிமேக் அக்ரோ இந்தியா, நோவோடெல், சிட்டெலம் மற்றும் கேப்ஜெமினி ஆகிய தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.  

இதில் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் சென்னைப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு CSR திட்டத்தின்கீழ் தங்கள் பங்களிப்பை வழங்க ஆர்வம் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டு தூதரக அலுவலர்களும், CITIIS திட்ட அலுவலர்களும் இராயபுரம் மண்டலம், கல்லறை சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி, சிமெட்ரி சாலையில் உள்ள சென்னை ஆரம்பப் பள்ளி மற்றும் மணிகண்டன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நேரடியாக சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இக்கூட்டத்தில் பிரான்ஸ் நாட்டு தூதரகத்தின் கன்சல் ஜெனரல் திருமதி லிஸ் டேல்போட் பேரி அவர்கள், துணை கன்சல் ஜெனரல் திரு.ப்ருனோ நுயென் அவர்கள், துணை ஆணையாளர் (கல்வி) திருமதி டி.சினேகா, பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

City Investments To Innovate Integrate and Sustain meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->