வெம்பக்கோட்டை அகழாய்வு - சுடுமண் பதக்கம் கண்டெடுப்பு.!
Clay medal found in vembakottai excavation
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் இதுவரைக்கும் 20 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
இதுவரைக்கும் இந்த அகழாய்வில் இருந்து ஏராளமான சங்கு வளையல்கள், சில்லு வட்டுகள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், செவ்வந்திகல், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சதுரங்க ஆட்ட காய்கள், பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கல், சேர நாட்டு செப்பு காசுகள், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு, ஈயம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது. மேலும், முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் இதர கலைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்யும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.
English Summary
Clay medal found in vembakottai excavation