ரூ. 3 கோடி மதிப்பில் 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகள்.. கொடியசைத்து துவக்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!
CM Stalin Inagurated 5 Tourist Buses Which Around Rs 3 Crore Worth
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (ஜூலை 1) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகளை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்ததாவது, "இந்தியாவிலேயே அதிக சுற்றுலாத் தளங்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அந்நிய செலாவணியை ஈர்த்தல் மற்றும் உள்ளூரில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் சுற்றுலாத் துறையின் பங்கு அளப்பரியது.
இந்நிலையில் இந்த சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு வகையான திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நேரடியாக வந்து செல்லும் வகையில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகளை தமிழகம் கொண்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் துறையின் பயணத் திட்டங்களுக்காக ரூ. 3 கோடி மதிப்பில் 35 இருக்கைகள் கொண்ட 4 பேருந்துகளும், 18 இருக்கைகள் கொண்ட 1 பேருந்தும் இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் கொடியசைத்து தொடங்கி வைக்கப் பட்டது.
இந்த பேருந்துகளில் குளிர் சாதன வசதி, GPS மற்றும் Wifi வசதி, தனித்தனி போன் சார்ஜர் போட்டுக் கொள்ளும் வசதி, மேலும் பயணிகள் தங்கள் உடமைகளை வைத்துக் கொள்ள தேவையான வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த அதிநவீன சொகுசு பேருந்துகள் உருவாக்கப் பட்டுள்ளன" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
English Summary
CM Stalin Inagurated 5 Tourist Buses Which Around Rs 3 Crore Worth