பெண்களுக்கு மாதந்தோறும் 1200 ரூபாய் மிச்சமாகிறது., எப்படி தெரியுமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
CM stalin Say About Free Bus For Ladies
தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவரின் அத உரையில்,
"மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம் என்ற ஒரு திட்டம் பெண்கள் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மட்டும் தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று சட்டமன்றத்திற்கு வருவதற்கு முன் என் தாயிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு, நானும், நம்முடைய அவை முன்னவரும் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் காரிலே வந்து கொண்டிருந்தபோது, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலே ஒரு பேருந்து நிலையத்திலே இறங்கி நின்றபோது, ஒரு பேருந்து வந்தது.
‘நீங்கள் எல்லாம் காரிலேயே உட்கார்ந்திருங்கள், நான் அந்தப் பேருந்திலே கொஞ்சம் நேரம் பயணம் செய்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லி, 29சி அந்தப் பேருந்தில் ஏறினேன். 29சி பேருந்து என்னுடைய வாழ்நாளிலே மறக்கமுடியாத பேருந்து. ஏனென்றால், பள்ளிப் பருவத்திலே இருந்தபோது, நான் கோபாலபுரத்திலிருந்து 29சி மூலம் பள்ளிக்குச் சென்று வந்தேன்.
அந்தப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த மகளிரிடத்திலே, ‘எப்படி இந்த ஆட்சி நடக்கிறது – ஒரு வருடம் ஆகியிருக்கிறது; இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம் – உங்களுக்குத் திருப்தியாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘ரொம்ப திருப்தியாக இருக்கிறது. உங்களைப் பார்த்ததே அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.’ என்று சொன்னார்கள்.
இந்த இலவசப் பயணத்தினால் உங்களுக்கு என்ன லாபம், எவ்வளவு மிச்சமாகிறது? என்ற கேள்விகளையெல்லாம் கேட்டேன். அதற்குரிய விளக்கத்தையெல்லாம் சொன்னார்கள். ஏற்கெனவே இதுகுறித்து மூன்று வழித்தடங்களில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. கோயம்பேடு முதல் திருவொற்றியூர் வரை; தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை; பிராட்வே முதல் கண்ணகி நகர் வரை பயணம் செய்யக்கூடிய 465 பயனாளிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
மாநிலத் திட்டக் குழுவால் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கேட்பின் வாயிலாக, இந்தத் திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினப் பெண்கள் அதிக அளவிலே பயன்பெற்று வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதிலும் குறிப்பாகப் பட்டியலினப் பெண்கள் அதிகமாக பயனடைந்திருக்கிறார்கள்.
இந்தச் சலுகை மூலமாக யார், எவ்வளவு பயனடைந்துள்ளார்கள் என்றும் கேட்கப்பட்டது.
வீட்டு வேலை பார்க்கும் ஒரு பெண், மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுவதாகச் சொன்னார். அரசுப் பேருந்துச் சலுகை வழங்கியதன் காரணமாக தனக்கு மாதம்தோறும் 850 ரூபாய் மிச்சமாகிறது என்று அவர் சொன்னார்.
பொருள்களை விற்பனை செய்யக்கூடிய ஒரு பெண், இந்த மாதம் 9 ஆயிரம் ரூபாய் சம்பாதித்ததாகச் சொன்னார். அரசுப் பேருந்துச் சலுகை வழங்கியதன் காரணமாக இந்த மாதம் 900 ரூபாய் மிச்சமானது என்று சொன்னார். இதுதான் இந்த அரசாங்கத்தினுடைய உண்மையான சாதனை என்று நான் சொல்வேன்.
ஒரு நிறுவனத்தில் பராமரிப்புப் பணியாற்றக்கூடிய ஒரு பெண் மாதம் 9 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுகிறார். அவருக்கு ஆயிரத்து 70 ரூபாய் மாதம்தோறும் மிச்சம் ஆகிறது. இதுதான் இந்த அரசாங்கத்தினுடைய உண்மையான சாதனையாகும். தினக்கூலித் தொழிலாளியாக ஒரு பெண் இருக்கிறார். அவர் 9 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் பெறுகிறார். அவருக்கு மாதம் 750 ரூபாய் மிச்சம் ஆகிறது.
அதாவது ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 600 ரூபாயில் இருந்து 1,200 ரூபாய் வரைக்கும் மிச்சம் ஆகிறது. 30-4-2022 வரை 106 கோடியே 34 லட்சம் பயணங்களை பெண்கள் இலவசமாக மேற்கொண்டுள்ளார்கள். இதுதான் மகத்தான சாதனை.
அன்றாடச் செலவுக்கு இல்லை என்ற நிலையில் இருக்கக்கூடிய பெண்கள் சேமிக்கக் கூடியவர்களாக ஆகியிருக்கிறார்கள். ஒரே ஒரு திட்டத்தைப் பற்றித்தான் நான் சொன்னேன். இப்படி ஒவ்வொன்றைப் பற்றியும் நான் விரிவாகச் சொல்ல முடியும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த உரையில் தெரிவித்தார்.
English Summary
CM stalin Say About Free Bus For Ladies