பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்படுகின்றன! கோவை மாவட்ட ஆட்சியர்.!
Coimbatore Election
கோவையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பிற்கு துணை இராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக-வினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியருடன் பேச்சுவார்தை நடத்தி உடன்பாடு ஏற்படாததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
இதனையடுத்து இன்று கோவையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களை சந்தித்தர். அப்போது பேசிய அவர்,
மாவட்டம் முழுவதும், மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்குப்பதிவு மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநகரில் மொத்தம் உள்ள 1290 வாக்குச்சாவடிகளில் 169 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தி நேரலையாகவே வாக்குப்பதிவினை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இன்று காலை 7 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சிறிய பிரச்சனை இருந்தது என்றும் அவை உடனடியாக சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
சிறிய பிரச்சனைகள் சில பகுதிகளில் இருந்ததாகவும், பறக்கும் படையினர் அங்கு விரைந்து சென்று காவல்துறையினரை அனுப்பி உடனடியாக பிரச்சனைகளை சரி செய்து வாக்காளர்களுக்கு எந்த பயமும் இல்லாமல் வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் பகுதியில் ஒரு சில கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் எதுவும் பதிவாகவில்லை என்றும் அப்படி புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.