வந்து விழுந்த கேள்வி.. "டென்ஷன் ஆனா அண்ணாமலை".. செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு..!!
Controversy due to Annamalai arguing with reporters
பிரதமர் நரேந்திர மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சியின் ஒலிபரப்பு தமிழக பாஜக சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2000 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாக வைத்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு கேள்வி எழுப்பினார்.
இதனால் டென்ஷனான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரை பார்த்து "நீங்களும் சம்பளம் வாங்கி இருக்கிறீர்கள் கொஞ்சமாவது வேலை செய்யுங்கள். 2010 கோடி என சொன்னார், எப்படி சொன்னார், என்னென்ன படங்கள் எடுத்தார்கள், அவர்கள் வெளியிட்ட படத்தின் மூலம் கிடைத்த வருவாய் என்ன என நீங்களும் வாங்கும் சம்பளத்திற்கு வேலை பாருங்கள். அப்போது தானே சாப்பிடும் சாப்பாடு உடம்பில் ஒட்டும்.
உங்களுடைய நிறுவனத்தின் டி.ஆர்.பிக்காக நான் ஏன் பேச வேண்டும். அண்ணாமலை பேசினால் உங்கள் நிறுவனத்தின் டிஆர்பி ஏறுமா என்று வருகிறீர்கள். 2010 கோடி இல்லை என நீங்கள் நிரூபியுங்கள். நான் பேசுவதை போட்டால் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் செய்தி சேனலை பார்க்கும் நேயர்களின் விருப்பம். நீங்கள் வெறும் நடுநிலையாளர்கள் தான். நான் பேசுவது பிடித்திருந்தால் உங்கள் நேயர்களுக்கு போடுங்கள். நீங்கள் ஒன்றும் தகுதிவான ஆடிட்டரோ, சார்ட்டட் அக்கவுண்டன்டோ, வழக்கறிஞரோ இல்லை.
நான் பேசுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் போடாதீர்கள். நான் உங்கள் கை காலில் வந்து விழுந்தேனா...? உங்க கூட டீ சாப்டனா..? இல்லை உங்க அலுவலகத்திற்கு வந்தேனா...? நான் சொல்லும் கருத்தை ஏற்புடையதாக இருந்தால் உங்கள் தொலைக்காட்சியில் போடுங்கள். இல்லை என்றால் போடாதீர்கள். உங்கள் நேயர்களுக்கு தெரியும் அண்ணாமலை சொன்னதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா..? ஏற்றுக்கொள்ள கூடாதா..?" என பேசிக்கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் பெரும் சலசலப்பு உண்டானது. ஏற்கனவே தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலை செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையானது என்பதை குறிப்பிடத்தக்கது.
English Summary
Controversy due to Annamalai arguing with reporters