யானை துப்பாக்கியால் சுட்டு கொலை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
Denkanikottai elephant shot death
தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி, தென்கனிக்கோட்டை அருகே உள்ள சென்னபாலம் கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி ஊருக்குள் 30 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
காட்டு யானை தாக்குதலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டத்தில் நேற்று ஒரு காட்டு ஆண் யானை துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்தது.
இதனை பார்த்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் மர்ம நபர்கள் காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்றது தெரிய வந்தது.
இதனை அடுத்து வனத்துறை கால்நடை மருத்துவர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து 2 தந்தங்களை மீட்டு பின்னர் யானையின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
இது குறித்து வனத்துறையினர், உயிரிழந்த யானைக்கு 15 வயது இருக்கும் எனவும் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி மர்ம நபர்கள் யானையை சுட்டு கொலை செய்துள்ளனர் எனவும் தெரிவித்தனர்.
மேலும், காட்டு யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்ததால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் காட்டு யானை கொலை செய்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் சந்தேகம் அடைகின்றனர்.
இதனால் வனத்துறையினரும் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனி படை அமைத்து யானையை கொலை செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Denkanikottai elephant shot death