தர்மபுரியில் ஓர் வேங்கைவயல் சம்பவம்! குடிநீர் தொட்டியில் சிறுநீர்! சிறுவன் உட்பட 3 பேர் கைது!
Dharmapuri sivadi Drinking Water issue
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், மலம் கலந்த குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
மேலும் இதுவரை எந்த ஒரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், தர்மபுரி அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் சிறுநீர் கழித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த சிவாடி கிராமத்தில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது.
சம்பவம் நடந்த அன்றைய இரவு சில மர்ம நபர்கள் இந்த குடிநீர் தொட்டியின் மீது ஏறி, குடிநீரில் வாந்தி எடுத்தும், சிறுநீர் கழித்தும் அசுத்தப்படுத்தியதாக தெரிகிறது.
இதை பார்த்த சிலர் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் துணை உடன் கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் சிவாடி கிராமத்தின் காலனி பகுதியை சேர்ந்த சிவசக்தி (22 வயது), வசந்த் (19 வயது), 16 வயது சிறுவன் ஒருவனும் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுநீர் கழிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
English Summary
Dharmapuri sivadi Drinking Water issue