விஜய், சீமானுடன் பணியாற்ற தயார் - பொதுவெளியில் போட்டுடைத்த இயக்குனர் அமீர்.!
director ameer press meet in trichy
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான அமீர், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- "கிராமங்கள் என்பது இந்தியாவின் முதுகெலும்பு ஆகும். ஆகையால் திரைத்துறையில் கிராமத்தை தவிர்த்து விட்டு எந்த படமும் எடுக்க இயலாது. அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் நெருக்கடி சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். அதுதான் எனக்கு உள் உணர்வு சொல்கிறது.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் நான் செல்வேன். விஜய் உடன் சீமான் இணைந்து செயல்பட உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். என்னை பொறுத்தவரை விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் எனக்கு மகிழ்ச்சி. சட்ட ஒழுங்கு என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சரியாக தான் உள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து, அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் சட்ட ஒழுங்கை பற்றி மட்டுமே கூற முடியும். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்பது பேசுவது ஒரு அரசியலாகும். " என்றார்.
இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர்சாதிக்கு, ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்த வழக்கை பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. நீதிமன்றத்தில் நீதியரசர் விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லாமல் இருப்பதாக தெரியவந்தது. ஆகையால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிகிறது. மற்றபடி எனக்கு இந்த வழக்கை பற்றி எதுவும் தெரியாது" என்று பேசியுள்ளார்.
English Summary
director ameer press meet in trichy