கேள்வி எழுப்பி, கண்டனம் தெரிவித்த துணிச்சலான ஒரே ஒரு தமிழ் இயக்குனர்! மலக்குழி மரணத்திற்கு முதல் கண்டனம் முக ஸ்டாலினுக்கு! - Seithipunal
Seithipunal


நாட்டிலேயே மலக்குழி மரணம் தமிழகத்தில் தான் அதிகம். அதிலும், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் தமிழகம் முழுவதும் ஒன்பது பேர் பலியாகி உள்ளனர்.

தலைநகர் சென்னை முதல் கடலூர் மாவட்டம் வரை பல்வேறு இடங்களில் மலக்குழி மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், தமிழ்த் திரைத் துறையை சேர்ந்த இயக்குனர் பா ரஞ்சித் முதல் ஆளாக தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவரின் ட்விட்டர் பதிவில், "தொடரும் மலக்குழி மரணங்கள்! தமிழ் நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம்! 

இக் கொடுமையான சமூக அவலத்தை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்க்கும் கடும் கண்டனங்கள்!!!

மலக்குழி மரணங்களை குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்சனையாக மட்டும் கருதி கடந்து போகாமல் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலமாக கருதி, சட்டங்களை இன்னும் கடுமையாக்கி, மக்களிடையே சரியான விழிப்புணர்வை உண்டாக்கி, உடனே தடுத்திட முனைவோம்! தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு!!!" என்று இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.  

முன்னதாக, இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், இந்து கடவுள்களை மலக்குழியில் இறக்கினால் என்ன நடக்கும் என்ற தேவையில்லாத சர்ச்சையை எழுப்பி துணை இயக்குனர் விடுதலை சிவப்பி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யும் நிலைக்கு சென்றது.

இதனை நியப்படுத்தி இயக்குனர் பா ரஞ்சித் கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். உண்மையில் மத்தியில் ஆளக்கூடிய பாஜகவையும், தமிழகத்தில் ஆளக்கூடிய திமுகவையும் தான் இயக்குனர் பா ரஞ்சித்தின் துணை இயக்குனர் கேள்வி எழுப்பி இருக்க வேண்டும். அல்லது பொதுப்படையாக மக்களை கேள்வி கேட்டு இருக்க வேண்டும். சர்ச்சை உண்டாக்கி கவனம் பெறவேண்டும் என்று எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என நினைத்து, சுய அறிவை இழந்து நின்று இருக்க கூடாது.

கவனம் பெறவேண்டும் என்பதுதான் முடிவு என்றால், அந்த கவிதையில் இடம் பெற்று இருக்க வேண்டியவர்கள் பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் தான். 

காரணம், தடுக்க வேண்டியது கண்ணுக்குத் தெரியாத கடவுள்கள் அல்ல, கடவுளை உருவாக்கிய மனிதர்களும் அல்ல, சாதி, மதங்களும் அல்ல. இந்த ஜனநாயக நாட்டில் ஒரு சமூக பிரச்னையை தீர்த்து வைக்க எந்த மத கடவுளாலும் முடியாது. 

ஆனால், கண்ணுக்குத் தெரிந்து ஆட்சி செய்யும், சட்டத்தை இயற்றும், சட்டத்தை திருத்தும், அநீதியை அழிக்கும் வல்லமை பெற்ற சட்டமன்றமும், பாராளுமன்றமும். மாநில முதல்வர்களும், மத்தியில் ஆளும் பிரதமரும் தான்.

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாக ஒரு சமூகம் வஞ்சிக்கப்பட்டு கொண்டே வருகிறது என்றால், இதுவரை ஆண்ட ஒருவரும் சரியில்லை என்றே பொருள்.

இதை இயக்குனர் பா ரஞ்சித் தற்போது உணர்ந்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை. சரியான இடத்தை நோக்கி தனது கேள்வியையும், கண்டனத்தையும் எழுப்பி இருக்கிறார். கடந்த இரு வருடத்தில் துணிந்து நின்று அவர் எழுப்பிய முதல் கேள்வி. அடுத்த கேள்வியும், கண்டனமும் மத்திய அரசை நோக்கியதாக இருக்க வேண்டும். 

நேர்மையாக, உள்நோக்கம் இல்லாமல் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும், நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு குடிமகனும் ஆதரவாக குரல் கொடுப்பார்கள். அந்த வகையில் பா ரஞ்சித்தின் இந்த கேள்விக்கு மக்களும், மக்களை நல்வழிப்படுத்தும் ஆட்சியாளர்களும் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

திருந்தாத மக்களை திருத்தவும், தண்டிக்கவும், நல்வழிப்படுத்தும் அதிகாரம் ஆட்சியாளர்கள் கையில் தான் உள்ளது. மக்களிடத்திலோ, மத கடவுள்களிடமோ இல்லை என்பதை சமூக போராளிகள் உணர்ந்துவிட்டால், ஆட்சியாளர்கள் நடுங்கிப்போய் நிற்பார்கள், பிரிவினை உண்டாக்கி அதில் குளிர்காய எண்ணி துணிய மாட்டார்கள்  என்பதில் ஐயமில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Pa Ranjith Condemn to TNGovt and TN People


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->