கோவை : ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது முறையாக தற்கொலை செய்ய முயன்ற மாற்றுத் திறனாளி - நடந்தது என்ன?
disabled person sucide attempt in covai collector office
கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியைச் சேர்ந்தவர் முகமது சாதிக் பாஷா. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கோத்தகிரி சாலையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் அலுவலகம் ஒன்று வைத்து நடத்தி வந்தார்.
இந்தக் கடையை கடந்த ஓராண்டுக்கு முன்னர் காலி செய்ய வேண்டும் என்று கடையின் உரிமையாளர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த கடையை உடைத்து சுமார் ஏழு லட்சம் மதிப்புள்ள பொருட்களை சிலர் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சாதிக் பாட்சா புகார் அளித்துள்ளார்.
ஆனால் போலீசார் இந்த சம்பவம் குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக சாதிக் பாட்ஷா கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த போது தீக்குளிக்க முயற்சி செய்ததால் அவரை தடுத்து நிறுத்திய போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சாதிக் பாட்ஷா இன்று மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்துள்ளார். அங்கு திடீரென தான் மறைத்து வைத்திருந்த சாணி பவுடர் கலக்கிய தண்ணீரைக் எடுத்து குடித்தார்.
இதைப்பார்த்த போலீஸார் ஓடிச்சென்று அவரிடம் இருந்த குடிநீர் பாட்டிலை பிடுங்கி, அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது முறையாக மாற்றுத்திறனாளி இளைஞர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
disabled person sucide attempt in covai collector office