நாமக்கல்லில் பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் - மாவட்ட கல்வி அலுவலர் தீவிர விசாரணை.!
district education officer investigation school student died case in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் அருகே நவலடிப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் ஆகாஷ். வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த இவர் நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார்.
அப்போது, இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற இருந்த கல்வி மேலாண்மை இயக்க நிகழ்ச்சிக்காக முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து ,அதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அழைத்துள்ளார்.
அதன் படி கூட்டத்திற்கு செல்ல மாணவர் ஆகாஷ் வகுப்பறைக்கு வெளியே வந்துள்ளார். அப்போது அவரின் செருப்பு காணாமல் போனதையடுத்து தனது செருப்பை யார் எடுத்தது? எனக் கேட்டு ஆகாஷ் கூச்சல் போட்டுள்ளார். அப்போது அவரது நண்பரான சக மாணவர், நான் தான் உனது செருப்பை எடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தேன், ஏன் இவ்வாறு பேசுகிறாய்? என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது ஆகாஷை, மற்றொரு மாணவர் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதையறிந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்த மாணவர் ஆகாஷை மீட்டு எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மாணவரை மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், செருப்பு காணாமல் போனது குறித்து மாணவன் ஆகாஷ் கேட்டதை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சக மாணவர் தாக்கியதால் மயங்கி விழுந்து ஆகாஷ் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை தாக்கிய மாணவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவர் உடன் படித்த மாணவர்கள் மற்றும் அந்த பள்ளியின் ஆசிரியர்களிடம் தனித்தனியாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் விசாரணை நடத்தி வருகிறார்.
English Summary
district education officer investigation school student died case in namakkal