டாஸ்மாக் பார் திறக்க தமிழக அரசு துடிப்பது ஏன்? அன்புமணி இராமதாஸ் சரமாரி கேள்வி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் குடிப்பகங்களை அமைக்க சில கட்டுப்பாடுகளை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி பிறப்பித்த ஆணையால் 560 குடிப்பகங்கள் மூடப்பட்டு, அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதைக் கருத்தில் கொண்டு ஒற்றை நீதிபதியின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் முன் டாஸ்மாக் நிறுவனம் முறையிட்டிருக்கிறது.

குடிகளைக் கெடுக்கும் குடிப்பகங்களை திறக்கும் விவகாரத்தில் டாஸ்மாக்  இவ்வளவு ஆர்வம் காட்டுவது கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மது குடிப்பகங்கள் அமைக்கப்படவிருக்கும் கட்டிடங்களின் உரிமையாளர்களிடமிருந்து டாஸ்மாக் நிறுவனம் தான் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும்; அனைத்து குடிப்பகங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு  அக்டோபர் 11-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் ஆணையிட்டார்.  இந்தத் தீர்ப்பின் காரணமாக 560 மதுக்குடிப்பகங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகளை கோர முடியாமல் அவை மூடப்பட்டன. 

உயர்நீதிமன்றத் தீர்ப்பால் ஏற்பட்ட இந்த விளைவை தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பாகவே பார்க்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக ஒருபுறம் கூறிவரும் தமிழ்நாடு அரசு, இன்னொருபுறம் மூடப்பட்ட  குடிப்பகங்களை விரைவாகத் திறக்க அனுமதிக்கும்படி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுவது ஏன்?

மதுக்குடிப்பகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பல வழிகளில் வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில்  மதுக்குடிப்பகங்கள் தான் சட்டவிரோத மது வணிக மையங்களாக திகழ்கின்றன.  டாஸ்மாக் மதுக்கடைகளில் மட்டும் தான் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மது விற்பனை செய்யப்பட வேண்டும். குடிப்பகங்கள் மது குடிப்பகதற்கான இடம் தானே தவிர மது வணிகத்திற்கான இடம் அல்ல என்பதால் அங்கு மதுவை விற்பனை செய்யக்கூடாது. 

ஆனால், குடிப்பகங்களில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடைபெறுகின்றன. கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டால் குடிப்பகங்களில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் தடைபடும் என்பது நல்லது தானே? அதைக் கண்டு தமிழக அரசு அஞ்சுவது ஏன்?

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான்  அரசின் கொள்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே கூறியிருக்கிறார்.  அதன் ஒரு கட்டமாக 500 மதுக்கடைகள் விரைவில் மூடப்படும் என்று சட்டப்பேரவையில் மதுவிலக்குத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

அப்படியானால் உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி மூடப்பட்ட குடிப்பகங்கள் தவிர, மீதமுள்ள குடிப்பகங்களை மூடுவது தான் அரசின் பணியாக இருக்க வேண்டும். அதை  விடுத்து மூடப்பட்ட மதுக் குடிப்பகங்களை  மீண்டும் திறக்க வசதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்கு தடை கோருவது ஏன்?

சென்னை அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள எலைட் டாஸ்மாக் விற்பனையகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி மது வழங்கும் எந்திரத்தை கடந்த மே மாதம் 3&ஆம் நாள் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,‘‘ டாஸ்மாக் வருமானத்தை நம்பி தமிழக அரசு நடக்கவில்லை.

 டாஸ்மாக் நிறுவனம் மூலம் வரும் வருமானத்தை வைத்து அரசை நடத்துவது போன்று சித்தரித்து செய்தி வெளியிடும் பத்திரிகை, தொலைக்காட்சி, செய்தி நிறுவனம் சமூக வலைத்தளம் என யாராக இருந்தாலும் சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இப்போது 560 மதுக் குடிப்பகங்கள் செயல்படாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் கூறியுள்ளது’’ ஒரு மாதம், ஒரு வாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு தலைகீழாக மாறியது ஏன்?

மதுவில்லாத தமிழகமே மகிழ்ச்சியான தமிழகமாக இருக்கும். எனவே, மூடப்பட்ட குடிப்பகங்களை  திறக்கும் நோக்குடன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை டாஸ்மாக் நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பேரவையில் அறிவித்தவாறு 500 மதுக்கடைகளை  உடனடியாக மூடுவதுடன், மீதமுள்ள மதுக்கடைகளையும் அடுத்த ஓராண்டிற்குள் மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மயிலாடுதுறை மாவட்டம்  மங்கைநல்லூரில் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுவை அருந்தியதால் பழனி குருநாதன், பூராசாமி ஆகிய இருவர் உயிரிழந்ததாக அவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுகுறித்தும் விரிவான விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Condemn to TNGovt for TASMAC Bar chennai HC Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->