12 வருஷமா இதேநிலை நீடிக்கலாமா? தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வைக்கும் அவரச கோரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பள்ளிகளில்  பணியாற்றி வரும் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான  பகுதி நேர சிறப்பாசிரியர்கள், தங்களுக்கு பணிநிலைப்பு  அல்லது  பணிப்பாதுகாப்புடன் கூடிய  ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வளாகத்தில் மூன்றாவது நாளாக இன்று உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், அவர்களின் 12 ஆண்டு கால கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தக்கூட தமிழக அரசின் சார்பில் அதிகாரிகள் கூட அனுப்பப்படாதது கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் சராசரி ஊதியம் ரூ.333 மட்டுமே. இது தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலியை விட மிகவும் குறைவு ஆகும். வாரத்தில் 3 அரை நாள்கள் மட்டும் தான் அவர்களுக்கு பணி வழங்கப்பட வேண்டும்.

ஆனால், எமிஸ் எனப்படும் கல்வி மேலாண்மைத் தகவல்களை ( Educational Management Information System - EMIS)பதிவு செய்யும் பணி அவர்கள் மீது தான் சுமத்தப்படுகின்றன.  பள்ளிகளின் நிர்வாகப் பணிகளையும் அவர்கள் தான் மேற்கொள்கின்றனர்.

அவர்கள் பணியில் சேர்க்கப்படும் போது ஒரே நேரத்தில் 4 பள்ளிகளில் பணியாற்றலாம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டிருந்தால் அவர்களுக்கு மாதம் ரூ.40,000 ஊதியம் கிடைக்கும். ஆனால், ஒரு பள்ளிக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களை 12 ஆண்டுகளுக்கும் மேலாக அதே நிலையில் வைத்திருப்பது நியாயமற்றது; மனிதநேயமற்ற செயல்.திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று திமுக தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அந்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இரு ஆண்டுகளுக்கு முன் போராட்டம் நடத்திய பகுதி நேர சிறப்பாசிரியர்களுடன் பேச்சு நடத்திய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு அல்லது பணிப்பாதுகாப்பு, வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி ஆகியவற்றுடன் மாத ஊதியம் ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்  என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால், இரு ஆண்டுகளாகியும் அந்த வாக்குறுதி  நிறைவேற்றப்படவில்லை.



பகுதிநேர ஆசிரியர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானவை. அவற்றை நிறைவேற்ற வேண்டிய கடமையும்,  பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது.

அதன்படி  மூன்றாவது  நாளாக உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் சந்தித்து பேச்சு நடத்த வேண்டும்; பணி நிலைப்பு  உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Condemn to TNGovt for Temparovery Teachers issue sep


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->