சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
Dr Anbumani Ramadoss Condemn Toll hike issue April 2023
அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் சுங்கக்கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் 10% வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை எந்த வகையிலும் மேம்படுத்தாமல் ஆண்டுக்கு ஆண்டு சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதை ஏற்க முடியாது. சுங்கக்கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது!
இந்தியாவின் ஒட்டுமொத்த சுங்கச்சாவடிகளில் 10 விழுக்காட்டுக்கும் மேல் தமிழகத்தில் தான் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 6606 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளில் 5134 கி.மீ சாலைகளுக்கு, அதாவது 77% சாலைகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தேசிய சராசரியான 20% விட 4 மடங்கு அதிகம்!
இன்றைய கட்டண உயர்வுடன் சேர்த்தால் மகிழுந்தில் பயணிக்க ஒரு கி.மீக்கு ரூ.1.52 சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது மிக அதிகம். சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்!
60 கிமீக்கு ஒரே சுங்கச்சாவடி, தமிழகத்தில் 9 சுங்கச்சாவடிகளில் 31.03.2023ஆம் தேதியுடன் சுங்கக்கட்டணம் 40% குறைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்த நிலையில், அவை எதுவும் செயலுக்கு வரவில்லை; ஆனால், கட்டணம் மட்டும் உயருகிறது. இது என்ன நியாயம்?
சுங்கச்சாவடி சீர்திருத்தங்களை செய்யாமல், சாலைகளை மேம்படுத்தாமல் கட்டணங்களை மட்டும் உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Condemn Toll hike issue April 2023