கேட்க சகிக்காது! மத்திய அரசுக்கு கண்டனத்துடன் எடுத்துரைக்கும் டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


அனைத்திந்திய  வானொலியின் செய்தி, அறிவிப்புகளில் கூட இந்தியைத் திணிப்பதா? தமிழ்நாட்டில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அனைத்திந்திய வானொலியின் அறிவிப்புகள், செய்திகள் போன்றவற்றிலும், அலுவல் சார்ந்த கடிதங்களிலும் இனி ஆல் இந்தியா ரேடியோ என்ற பதத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்கு மாற்றாக ஆகாஷ்வாணி என்ற பதம் தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வானொலி நிலையங்களுக்கு அதன் தலைமை அலுவலகத்தின் கொள்கைப்பிரிவு ஆணையிட்டுள்ளது. இது அப்பட்டமான இந்தித் திணிப்பு ஆகும்.

அகில இந்திய வானொலி தலைமை அலுவலகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து  ஆங்கிலச் செய்திகளில் ஆல் இந்திய ரேடியோ என்பதற்கு மாற்றாக  ஆகாஷ்வாணி என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் செய்திகளிலும் இன்று பிற்பகல் முதல் ஆகாஷ்வாணி என்ற பதம் பயன்படுத்தப்படவிருப்பதாக தெரிகிறது. இதை ஏற்க முடியாது.

என்னென்ன வழிகளில் எல்லாம் இந்தியைத் திணிக்க முடியுமோ, அந்தந்த வழிகளில் எல்லாம் இந்தியைத் திணிக்க மத்திய அரசு துடிக்கிறது.  அதன் வெளிப்பாடு தான் தமிழ்நாட்டு வானொலி நிலையங்களின் செய்திகளிலும்,  அறிவிப்புகளிலும் கூட  ஆகாஷ்வாணி என்று அறிவிக்க கட்டாயப்படுத்துவதாகும். பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் தாய்மொழிக்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால், வானொலியின் தலைமையோ இந்தியைத் திணிக்கத் துடிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

வானொலி வேண்டுமானால் தேசிய அளவிலானதாக இருக்கலாம். ஆனால், அதன் நிகழ்ச்சிகள் உள்ளூர் அளவிலானவை. அதனால் அதற்கான அறிவிப்புகளும், வானொலி சேவையின் பெயரும் கூட உள்ளூர் மொழிகளில் தான் இருக்க வேண்டும். அனைத்திந்திய வானொலி என்று அழகுத் தமிழில் அழைப்பதற்கு மாற்றாக, ஆகாஷ்வாணி என்று இந்தியில் அறிவிப்பதைக் கேட்க சகிக்காது.  

அதையும் கடந்து தொடர்ந்து இந்தியைத் திணித்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது. எனவே, ஆகாஷ்வாணி அறிவிப்பு ஆணையை ரத்து செய்து விட்டு, தமிழில் ஆல் இந்தியா ரேடியோ என்பதை அனைத்திந்திய வானொலி என்று அறிவிக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Condemn To AIR and Central Govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->